போயிங் விமானம் வாங்கும் திட்டம்: கவலையில் பயண உதவியாளர்கள் சங்கம்

 

masaeroplanesபுதிய போயிங் விமானங்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்க மலேசியன் ஏர்லைன்ஸ் சிஸ்டம் (மாஸ்) திட்டமிட்டிருப்பது குறித்து மலேசிய தேசிய பயண உதவியாளர்கள் சங்கம் (நுபாம்) வேதனையடைந்துள்ளது.

புதிய விமானங்கள் வாங்குவது என்றால் அவை செல்வதற்கான புதிய பயணப்பாதைகள் மற்றும் அவற்றை இயக்குவதற்கு கூடுதல் தொழிலாளர்களைச் சேர்த்தல் என்பதாகும் என்று நுபாமின் தலைமைச் செயலாளர் முகமட் அக்ரம் ஓஸ்மான் குறிப்பிட்டார்.

இது மாஸ் 2015 ஆம் ஆண்டில் அதிகப்பட்டியாக உப்பி விட்டது, ஆகவே செலவுகளைக் குறைக்க தொழிலாளர்கள் குறைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலைமை மீண்டும் ஏற்படக்கூடும் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.

அப்போது 6,000 தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். இது நடந்து இன்னும் மூன்று வருடங்கள்கூட ஆகவில்லை. அவர்கள் இன்னும் அதிகமான செலவு செய்து கூடுதல் விமானங்கள் வாங்குவதில் இறங்கியுள்ளனர் என்றாரவர்.

அரசாங்கம் ரிம6 பில்லியனை முதலீடு செய்து விட்டது. இப்போது இன்னும் கூடுதல் பணத்தைச் செலவிடத் தயாராகிறது. மாஸ் என்ன அவ்வளவு பெரிய இலாபத்தை ஈட்டியுள்ளதா என்று அக்ரம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கேட்கிறார்.

இதுவரையில் மாஸ் எந்தவொரு புதிய பயணப் பாதைகளை அறிவிக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் மீட்சி பெறுவதற்கு மாஸ் ஏதாவது செய்யும் போது மற்றவை உள்ளே புகுந்து விடுகின்றன என்றாரவர்.

நிதிப் பிரச்சனைகளாலும் தவறான நிருவாகத்தினாலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியதோடு வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.

மாஸ் அதன் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று அரசாங்கம் கோருகிறது. ஆனால் இப்போது நாம் காண்பது ஒட்டுமொத்தமாக எதிர்மாறானதாக இருக்கிறது என்று கூறிய அக்ரம், கூடுதல் புதிய விமானங்கள் வாங்குவதற்கு வேறு நோக்கமிருக்கக்கூடும், ஆனால் அதற்காக மாஸ் பலியிடப்படுகிறது என்றார்.