திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே, ஆர்.சி.ஐ. தனது விசாரணையை முடித்து கொண்டது, பிரதமர் நஜிப் ரசாக் சாட்சியம் அளிப்பதிலிருந்து தவிர்ப்பதற்காகவா, என்று லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பினார்.
ஆர்.சி.ஐ.க்குச் சாட்சியமளித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட், 1993- ஆம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய வங்கி இழப்புக்கு ஆர்.சி.ஐ. அமைக்க வேண்டுமென்ற கிட் சியாங்கின் திட்டத்தை நிராகரித்த அமைச்சர்களில் நஜிப்பும் ஒருவர் என்று கூறியிருந்தார்.
ஆக, நஜிப் சாட்சியம் அளிப்பதிலிருந்து தவிர்க்க, ஆர்.சி.ஐ. தனது விசாரணையை முடித்துக்கொண்டதா என அவர் கேட்டார்.
1993-ல், ஃபோரெக்ஸ் குறித்து விசாரணை செய்ய, ஆர்.சி.ஐ.-யை அமைக்கச் சொல்லி அப்போதைய நிதி அமைச்சர் அன்வார் இப்ராஹிமை லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார்.
நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மகாதீர், சில வருடங்களுக்கு முன் இல்லாமல், இப்போது ஏன் ஆர்.சி.ஐ. விசாரணை நடக்கிறது என்று நஜிப் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
“கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஃபோரேக்ஸ் பற்றிய உண்மை தனக்குத் தெரியும் என்று கூறிய, முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவி, ஏன் அவர் பதவி காலத்தின் போது, ஆர்.சி.ஐ. விசாரணைக்கு ஏற்பாடு செய்யவில்லை,” என்றும் லிம் கேள்வி எழுப்பினார்.