ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் எப்போது வேண்டுமானாலும் ஜோகூரிலிருந்து நேரடியாக பியோங்யாங் செல்ல முடியும். நேற்று அவருக்கும் வட கொரிய தூதர் கிம் யு சோங்-குக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து அவருக்கு அச்சலுகையை பியோங்யாங் வழங்கியது.
“இது மிகப் பெரிய கெளரவம் ஏனென்றால் மற்ற உலகத் தலைவர்கள் முதலில் பெய்ஜிங் சென்று அங்கிருந்துதான் செல்ல முடியும்”, என சதர்ன் டைகர்ஸ் முகநூல் பக்கத்தில் இடம்பெற்ற செய்தி கூறியது.
மலேசிய கால்பந்து சங்கத் தலைவருமான துங்கு இஸ்மாயில், வெளியுறவு, நடப்பு விவகாரங்கள் பற்றியும் ஆசிய கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றில் பி-பிரிவுக்கான இறுதி ஆட்டம் குறித்தும் விவாதிப்பதற்கு கிம்மைச் சந்தித்தார்.
ஆட்டக்காரர்கள் மற்றும் குழு அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆவன செய்யப்படும் என இரு நாடுகளும் உறுதிகூறியதாகவும் அச்செய்தி கூறிற்று.