ஜொகூர் அரச பரம்பரையைச் சேர்ந்த துங்கு ஆலாங் ரேஷா துங்கு இப்ராஹிம், கடந்த ஜூன் மாதம், மெதாம்ப்ஹிதமின் ரக போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகவும், கனாபிஸ் ரக கஞ்சாவை வைத்திருந்ததாகவும் நேற்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
31 வயதான துங்கு ரேஷா தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை, மாஜிஸ்திரேட் நுருல்ஹூடா ஷாக்காரியா முன்னிலையில் மறுத்தார்.
முதல் குற்றச்சாட்டில், கடந்த ஜூன் 4-ம் தேதி, காலை மணி 2.20 அளவில் பண்டார் உத்தாமா, பெட்டாலிங் ஜெயா காவல் நிலையத்தில் மெதாம்ப்ஹிதமின் ரக போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அபாயகரமான போதைப்பொருள் சட்டம் (ADB) பிரிவு 15 (1) (a), 1952 சட்டம், 15-வது பிரிவின் கீழ், அதிகபட்ச அபராதமாக RM5,000 அல்லது அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும், இரண்டு ஆண்டுகள் கட்டாயப் போலிஸ் கண்காணிப்போடு விதிக்கப்படலாம்.
இரண்டாவது, மூன்றாவது குற்றச்சாட்டுகளில், அதே நாளில் மதியம் 12 மணியளவில், பண்டார் டாமான்சாரா பெர்டானா, ரிட்ஸ் பெர்டானா கொண்டோமீனியத்தில் அவர் 0.9 கிராம் கஞ்சா மற்றும் 0.15 கிராம் மெதாம்ப்ஹிதமின் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு, பிரிவு 6-ன் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி எனில், RM20,000 அபராதம் அல்லது அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதற்கிடையே, அவரின் தோழி புத்ரி நூர் ஷவானி முகமட் ரஷிட், 33, அவர் மீது சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
அவர்களின் வழக்குரைஞர் ராஜ் பிரீட் கோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, துங்கு ரேஷா RM4,500 மற்றும் ஒரு நபர் ஜாமினிலும், புத்ரி நூர் ஷவானி RM3,000 ஜாமினிலும் விடுதலை செய்யப்பட்டனர்.
எதிர்வரும் அக்டோபர் 31-ம் தேதி, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
நான் பல முறை கூறியது போல , நேர்மையான , திறமைமிக்க , மதம் , இனம் பார்க்காத , இலஞ்சம் வாங்காத அரசாங்க தற்காப்பு வக்கீல் , காவல்துறை அதிகாரிகள் இல்லாதவரை நாட்டில் அனைத்துவிதமான வன்முறைகளும் , குண்டர்தனமும் , நினைத்துப்பார்க்கயியலாத அசம்பாவிதமும் நடந்தேறும் , நடந்துக்கொண்டே இருக்கும் . அதேவேளையில் மலேஷியா குற்றம் இல்லா பாதுகாப்பான நாடு என்ற அறிவிப்பும் தொடந்ர்துகொண்டே இருக்கும் . நம் பாதுகாப்பு நம் கையில் என்பதனை ஒவ்வொருவரும் புரிந்துக்கொண்டு நடந்திடவேண்டும் . சிந்தித்து நடப்போம் . நன்றி .