சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி ‘நஜிப்நொமிக்ஸ்’ கவலைப்படுவதில்லை என்பதை, அரசாங்கத்தின் சில அணுகுமுறைகள் காட்டுகின்றன என்று, குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியு சின் தோங், இன்று வெளியிட்ட ஒரு பத்திரிக்கை அறிக்கையில் கூறியுள்ளார்.
“பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால், பிரதமர் நஜிப்பின் அரசாங்கம் திமிராகவும் அக்கறையற்றதாகவும் தெரிகிறது. சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைச் சூழலை நஜிப் புரிந்துகொள்ளவில்லை, நஜிப்பின் பொருளாதார நிர்வாகம் அல்லது நஜிப்நொமிக்ஸ் (நஜிப் எகோனோமிக்ஸ்) மலேசிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி கண்டுவிட்டதை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை, அதுகுறித்து கவலை தெரிவிக்கையில், பேசுகின்றவர்கள் அல்லது புகார் செய்பவர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது,” என லியு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
“கடந்த வாரம், 6% பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) விமர்சித்த கட்சிகளை நஜிப் விமர்சித்தார். அவரைப் பொறுத்தவரை, 6% வரி நாட்டிற்கு நல்லது, யாரும் அதுபற்றி விமர்சிக்கவோ, புகார் செய்யவோ கூடாது.”
ஊடகங்களில், ஏளனத்தொனியோடு நஜிப் மேற்கோள் காட்டியுள்ளார்: “இந்தியாவில் ஜிஎஸ்டி 28% ஆகும். தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், நமக்கு இப்போதுதான் 6%, அதற்கே நாம் ஆர்ப்பாட்டம் செய்கிறோம், அரசாங்கத்தின் மீது கோபம் கொள்கிறோம்,” என கூறியிருந்தார்.
“உண்மையில், இந்தியாவின் ஜிஎஸ்டி பற்றிய நஜிப்பின் தகவல்களில் உண்மையில்லை, அவை தவறானவை,” என்றார் லியு.
அதைவிட, கருவூலத் தலைமைச் செயலாளர், இர்வான் செரிகர் அப்துல்லா கூறியது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது எனவும் அவர் தெரிவித்தார்.
“ஒருவர் ஏழையாக இருப்பதற்கு அவரே காரணம், தங்களைத் தாங்களே மோசமாக நடத்துகிறவர்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களுக்குக் கைகள் மற்றும் நடக்க கால்கள் உண்டு, எனவே, அவர்களால் மலேசியாவில் வாழ முடியும்,” என்று இர்வான் செரிகர் கூறியுள்ளார்.
மலேசியர்கள் ஏழைகளாக இருப்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லை, காரணம் இங்கு மகிழ்ச்சியுடன் வாழ பல வாய்ப்புகள் இருக்கின்றன என்று இர்வான் கூறியுள்ளார்.
அவரைப் பொறுத்தவரையில்: “மலேசியப் பொருளாதாரம் சரிந்துவிட்டது, மக்கள் ஏழைகளாகிவிட்டனர் என்று ஒருவர் கூறினால், அவர்கள் தவறாக சொல்கிறார்கள் என்றே அர்த்தம். வங்காளதேசம், பிலிப்பினா போன்று நாம் கடன்பட்டுள்ள நாடு இல்லை. ஒருசிலர் (மலேசியாவை ஓர் ஏழை நாடு என்று சொல்லி) மக்களைக் குழப்ப முயற்சி செய்கின்றனர்.”
இரண்டு நாட்களுக்கு முன், இந்தோனேசியர்களால் இங்கு சம்பாதித்து வாழமுடிகிறது என்றால், மலேசியர்களால் அவர்களைவிட இன்னும் சிறப்பாக வாழமுடியும், ஆனால் அவர்கள் முயற்சிக்கவில்லை என்று இர்வான் கூறியிருந்தது குறிப்பிட்டத்தக்கது.
“1985-ல், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, குறைந்தபட்சம் மலேசிய அரசாங்கம் அதனை ஒப்புக்கொண்டது. அதேபோல் 1997-லிலும் பொருளாதார நெருக்கடியின் போது, அப்போதையப் பிரதமர் மகாதீர் மற்றும் துணைப் பிரதமர் அன்வாருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தாலும், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அணுகுமுறைகளைப் பற்றி அவர்கள் விவாதிக்கவே செய்தனர்,” என்று இதற்கு முன்னால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலங்களை லியு நினைவு கூர்ந்தார்.
“துரதிருஷ்டவசமாக, இன்றைய நமது நிலை, நஜிப் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத, ‘முடக்கப்பட்ட நெருக்கடி’ ஆகும். மலேசியர்கள் துன்பத்தில் இருக்கும்போது, அரசாங்கம் தாமாகவே தங்கள் நிர்வாகத் திறனைப் புகழ்ந்து, பாராட்டுவதும் அல்லது இர்வானைப் போன்று மக்களைக் குற்றம் சாட்டுவதாகவும் இருப்பது வருத்தத்திற்குரியது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஏப்ரல் 1, 2015-ல், ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்டதன் விளைவாக, கடந்த அக்டோபர் மாதம் முதல், ரிங்கிட்டின் மதிப்பு குறைந்ததோடு, தொடர்ச்சியாகப் பல மானியங்களையும் அகற்றியதன் காரணமாகப் பொருள்களின் விலைகள் அதிகரித்தன. இந்தச் சூழ்நிலையில், மக்களின் செலவழிக்கத்தக்க வருமானம் வீழ்ச்சியடைந்ததோடு; உள்நாட்டு நுகர்வோர் துறையையும் மோசமாக்கியது.
சம்பள அதிகரிப்பு இல்லாமல், இவை அனைத்தும் நடந்ததோடு, திறன்குறைந்த வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகையைக் குறைக்கவும் அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட அதிகமான மலேசியர்கள், வெளிநாடுகளில் வேலை தேடுகின்றனர். ஜொகூர் வழியாக, தினசரி சிங்கப்பூருக்குப் பயணிக்கும் மலேசியர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 200,000 முதல் 300,000 வரை அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானம், அழுக்கு மற்றும் அபாயகரமான துறைகளில் வேலை செய்ய வேண்டியக் கட்டாயத்தில் உள்ளனர். ஐக்கிய இராச்சியத்திலும் ஆஸ்திரேலியாவிலும் கூட, அதிகமான மலேசியர்கள் சட்டவிரோதமாக வேலை செய்கிறார்கள்.
“ஆக, தற்போது எழுந்திருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க விரும்பினால், அரசாங்கம் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதை, முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். அதோடு, மக்கள் மீது குற்றம் சாட்டுவதையும் மக்களைக் கேலி செய்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியு சின் தோங் தனது பத்திரிக்கை அறிக்கை வாயிலாக நஜிப் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவனுக்கென்ன பயம்? வரும் தேர்தலிலும் அவன்தான் ஆட்சி பீடத்தில் உட்காருவான். அப்படி இருக்கையில் மக்களைப்பற்றி- அவனின் சப்பிகளை அல்ல – அவனுக்கென்ன வேர்த்தா வடிகிறது? அவனுக்குத்தான் காவல் ராணுவம் அரசு ஊழியர்கள் பங்களாக்கள் இந்தோக்கல் மற்றும் தில்லுமுல்லுகள் இருக்கவே இருக்கு அவனை ஆட்சி பீடத்தில் அமர்த்த!