கடல்படை வீரர் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் நினைக்கிறது

சித்தியவானுக்கு     அருகில்   சுங்கை  வாங்கி    தடுப்புக்காவல்  முகாமில்  இருந்த  அரச  மலேசிய   கடல்படை(ஆர்எம்என்)    வீரர்கள்   இருவரும்   இறப்பதற்குமுன்   சித்திரவதைக்கு   ஆளானதாக   போலீஸ்  நம்புகிறது.

இதனைத்   தெரிவித்த  பேராக்   குற்றப்  புலனாய்வுத்துறைத்   தலைவர்    கான்  தியான்  கீ,   நிக்  முகம்மட்   பாய்ஹகி    நிக்   மாட், 28,    முகம்மட்  லைலால்   துய்மான்   முகம்மட்  ஷுக்ரி ,26,  ஆகிய     இருவர்மீதும்   நடத்தப்பட்ட   பிணப்  பரிசோதனை   அறிக்கையை  வைத்து  அவர்களின்     இறப்பைக்  கொலை   என்று   போலீஸ்   வகைப்படுத்தியுள்ளதாகக்  கூறினார்.

“பிணப்  பரிசோதனையில்   அவர்கள்   சித்திரவதைக்கு   ஆளானதும்    அதனால்   காயங்கள்   ஏற்பட்டிருப்பதும்   தெரிய  வந்துள்ளது”,  என  இன்று  அவர்  கூறினார்.

நேற்று  ஆர்எம்என்  ஓர்   அறிக்கையில்,   நிக்  முகம்மட்   பாய்ஹகியும்     முகம்மட்  லைலால்   துய்மானும்  தடுப்பு   முகாமில்      உடல்  பயிற்சியில்  ஈடுபட்ட   பின்னர்    இறந்துபோனதாகக்  கூறியிருந்தது.

பயிற்சியின்போது   அவர்கள்  களைப்படைந்து   இளைப்பாற   விரும்பினார்கள்   என்றும்   அப்போது   வாந்தி  எடுத்து   மூச்சுத்திணறல்   ஏற்பட்டது   என்றும்  பிற்பகல்  3.15க்கு  மருத்துவ  உதவியாளர்கள்   வருவதற்குள்  இருவரும்    இறந்து   போனார்கள்   என்றும்   அது  கூறிற்று.

-பெர்னாமா