சுங்கை வாங்கி, சித்தியவான் தடுப்புக்காவல் முகாமில் இருந்த அரச மலேசிய கடற்படை (ஆர்எம்என்) வீரர்கள் இருவரின் இறப்பு குறித்த விசாரணையில், எந்தவொரு தகவலும் மறைக்கப்படாது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் உறுதி கொடுத்துள்ளார்.
மேலும், விசாரணை மேற்கொள்ள அரச மலேசிய போலிஸ் படைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அரச மலேசியக் கடற்படையை அவர் கேட்டுக்கொண்டார்.
“அரச மலேசிய கடற்படையை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். எதுவும் மறைக்கப்படாது, அது என் வாக்குறுதி,” என பிரதமர் துறை இலாகாவின் சிறப்பு பணிகளுக்கான அமைச்சருமான அவர் தெரிவித்தார்.
“குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், சட்ட நடவடிக்கையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தற்போது, காவல்துறையினரின் விசாரணைகள் தொடரட்டும்,” என்று அவர் இன்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்தார்.
முன்னதாக, பேராக் குற்றப் புலனாய்வுத்துறைத் தலைவர் கான் தியான் கீ, நிக் முகம்மட் பாய்ஹகி நிக் மாட், 28, முகம்மட் லைலால் துய்மான் முகம்மட் ஷுக்ரி ,26, ஆகிய இருவரும் இறப்பதற்குமுன் சித்திரவதைக்கு ஆளானதாக போலீஸ் நம்புகிறது என்று கூறியிருந்தார்.
ஈப்போ, ராஜா பெர்மாய்சூரி பைனுன் பொது மருத்துவமனை வெளியிட்ட, பிரேதப் பரிசோதனை அறிக்கையை வைத்து, அவர்களின் இறப்பைக் கொலை என்று போலீஸ் வகைபடுத்தியுள்ளதாகக் கூறினார்.
“பிரேதப் பரிசோதனையில் அவர்கள் சித்திரவதைக்கு ஆளானதும் அதனால் காயங்கள் ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது”, என இன்று அவர் கூறினார்.
நேற்று, நிக் முகம்மட் பாய்ஹகியும் முகம்மட் லைலால் துய்மானும் தடுப்பு முகாமில் உடல் பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் இறந்துபோனதாக ஆர்எம்என் ஓர் அறிக்கையில் கூறியிருந்தது.
பயிற்சியின்போது அவர்கள் களைப்படைந்து இளைப்பாற விரும்பினார்கள் என்றும் அப்போது வாந்தி எடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்றும் பிற்பகல் 3.15க்கு மருத்துவ உதவியாளர்கள் அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாகக் கூறினர் என்றும் அவ்வறிக்கை கூறிற்று.