கடந்த வாரம் துருக்கிய செய்தியாளர் முஸ்தபா அக்யோல் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டது பாதுகாப்புக் காரணங்களுக்காக அல்ல என்று இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் ஃபுசி ஹருன் விளக்கம் தந்துள்ளார்.
அனுமதியின்றி “சமயப் போதனை” செய்ததற்காக கூட்டரசுப் பிரதேச இஸ்லாமியத் துறை (ஜாவி) அதிகாரிகள் அவரைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதால் போலீஸ் அவரைக் கைது செய்தது என்றாரவர்.
“மிகப் பலர் போலீசைக் குறை சொன்னார்கள். அது உண்மை அல்ல. அவர்மீது நடவடிக்கை எடுத்தவர்கள் சமய அதிகாரிகள்.
“நாங்கள் கைது செய்ய உதவினோம். அவ்வளவுதான்”, என்றார்.
முஸ்தபா நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டல் என்று போலீஸ் கருதுகிறதா என்று வினவியதற்கு, “நான் அவரை மிரட்டலாக நினைக்கவில்லை”, என புசி கூறினார்.
முஸ்தபா, செப்டம்பர் 24-இலும் 25-இலும் கோலாலும்பூரில் உரையாற்ற வந்திருந்தார்.
செப்டம்பர் 24-இல் பேசினார். ஆனால், ஜாவி அதிகாரிகள் அவரை அணுகி விசாரிக்கத் தொடங்கியதும் அவரது இரண்டாவது நிகழ்வை ஏற்பாட்டாளர்கள் இரத்துச் செய்தனர்.
நான்கு நாள்களுக்குமுன் முஸ்தபா அவருடைய நியு யோர்க் டைம்ஸ் பத்தியில் கேஎல்ஐஏ-இல் தாம் கைது செய்யப்பட்ட சம்பவத்தை விவரித்திருந்தார். கைது செய்ததும் இரண்டு போலீஸ் நிலையங்களுக்குக் கொண்டு சென்றார்கள், பின்னர் ஜாவி தலைமையகத்துக்கு, முடிவில் ஷியாரியா நீதிமன்றத்துக்கு. அங்கு மணிக்கணக்கில் விசாரணை.
அதன் பின்னர் துருக்கிய தூதரகம், முன்னாள் துருக்கிய அதிபர் அப்துல்லா குல், மலேசிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர் தலையிட்ட காரணத்தால்தான் தாம் விடுவிக்கப்பட்டதாக முஸ்தபா கூறினார்.