ஜெர்மன் விழா நடபெறும், தெங் கூறுகிறார்

 

கிள்ளானில் திட்டமிட்டபடி ஜெர்மன் எப்&பி விழா நடத்தப்படும், ஏனென்றால் அவ்விழாவின் ஏற்பாட்டாளர்கள் கிள்ளான் நகராட்சி மன்றத்தின் (எம்பிகே) அனுமதியைப் பெற்றுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம் கூறினார்.

எம்பிகேயின் அனுமதி செப்டெம்பர் 28 லேயே கொடுக்கப்பட்டது. போலீசாரிடமிருந்து சில விளக்கங்கள் பெற வேண்டியதால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது.

எனினும், ஒரு சட்டப்பூர்வமான நிகழ்ச்சிக்கு போலீஸ் தடை விதிக்க முடியாது என்பதை தெங் வலியுறுத்தினார்.

ஏற்பாட்டாளர்களுக்கு தற்காலிக பெமிட் வழங்கப்பட்டுள்ளது. அதில் 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரிம400 கட்டணமும் செலுத்த வேண்டும் என்றாரவர்.

ஆனால், அவர்கள் இன்னும் கட்டணத்தைச் செலுத்தவில்லை. காரணம், போலீஸ் சமீபத்தில் விடுத்த அறிக்கைகள். எப்படிப் போகிறது என்று பார்ப்பேம் என்று தெங் மேலும் கூறினார்.

வட கிள்ளான் மாவட்ட போலீஸ் துணை அதிகாரி நோர் ஒமார் சாபி செப்டெம்பர் 14 இல் அனுப்பிய கடிதத்தில் நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஆட்சேபம் இல்லை என்றும் ஏற்பாட்டாளர்களின் கடிதத்தை ஆதரிப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆனால், வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி மாஸெலான் பைஜான் அப்படி ஒரு கடிதம் ஏதும் இல்லை கடந்த சனிக்கிழமை கூறியதோடு மதுபானம் வழங்கப்படும் என்பதால் அந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு போலீஸ் அனுமதிக்காது என்றும் கூறியிருந்தார்.

போலீசாரின் இக்கூற்றை மறுத்த தெங், போலீசார் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பிய செப்டெம்பர் 14 தேதியிடப்பட்ட கடிதத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஹாகிட் ஹமிடி விடுத்திருந்த அறிக்கைக்குப் பின்னர் போலீசாரிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தாம் நம்புவதாக தெங் மேலும் கூறினார்.

“அவர்கள் (போலீசார்) தைச் சீ பயிற்சி நடத்த முடியாது. அவர்கள் தொழிலியம் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். பிரச்சனைகள் ஏதும் இல்லை என்றால், குறிப்பாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது இது முதல்தடவை இல்லை என்பதால், அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

“வேறு எவரிடமிருந்தாவது அழுத்தம் வரும் என்பதற்காக பயப்பட வேண்டாம். என்னைப் பொறுத்த வரையில், துணைப் பிரதமர் அந்த அறிக்கையை வெளியிட்ட போது, அவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்”, என்று தெங் மேலும் கூறினார்.

இன்று முன்னேரத்தில், இன்ஸ்பெக்டர் ஜெனரல்  மொகமட்  ஃபூஸி ஹருண், இந்த நிகழ்ச்சியை போலீஸ் நிறுத்த முடியாது, ஏனென்றால் இதற்கான முறையான அதிகாரம் உள்ளூராட்சி மன்றத்திடம் இருக்கிறது என்றார்.