நாடற்ற இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்க முடியாதென்றால், மலேசிய இந்தியர்கள் மேம்பாட்டுத் திட்டம் (எம்ஐபி) பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை என்று கூறுகிறார் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்.
தமிழ் இடைநிலைப்பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், இந்திய மாணவர்களுக்கு நல்ல பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள இந்துக் கோயில்களைக் கவனித்துக்கொள்ள இந்து அறக்கட்டளைகள் அமைத்தல் போன்ற “அர்த்தமுள்ள” சீர்திருத்தங்கள் வழி மட்டுமே எம்ஐபியை மற்றுமொரு தேர்தல் தந்திரம் என்று இந்தியர்கள் கருதாமல் இருக்க முடியும் என்று பினாங்கு முதல்வரான அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
அரபு, ஆங்கிலம் அல்லது மென்டரின் ஆகிய மொழிகள் இடைநிலைப்பள்ளிகளில் போதனா மொழிகளாக இருக்கையில், தமிழ் இடைநிலைப்பள்ளிக்கு அனுமதி அளிக்க கல்வி அமைச்சு மறுப்பதற்கு காரணம் ஏதும் இல்லை என்றாரவர்.
பினாங்கு மாநில அரசு இலவசமாக நிலம் தர தயாராக இருக்கிறது, மத்திய அரசு கட்டடம் கட்டுவதற்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்பதை குவான் எங் புதன்கிழமை நடைபெறவிருக்கு தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றிய அவரது அறிக்கையில் வலியுறுத்தினார்.
குவான் எங்கின் கருத்துப்படி, பினாங்கில் இந்து அறக்கட்டளை வாரியம் அடைந்துள்ள வெற்றியை தீபகற்ப மலேசியாவிலுள்ள ஒவொவொரு மாநிலமும் ஆர்வத்துடன் பின்பற்ற வேண்டும்.
பொது உயர்நிலைக் கல்விக் கழகங்களில் கூடுதலாக 700 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அளித்துள்ள வாக்குறுதி, மருத்துவம், பொறியாளர்துறை, கணக்கியல், சட்டம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய துறைகளுக்கு மட்டுமே என்றால், அது ஒரு தீபாவளி “பரிசாக” மட்டுமே இருக்கும் என்று குவான் எங் மேலும் கூறினார்.