பெட்டாலிங் ஜெயா, பாடாங் திமோரில் நடைபெற்ற கொள்ளைக்கார ஆட்சி எதிர்ப்புப் பேரணியின் அலுவலகத்தைச் சேர்ந்த உறுப்பினர் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
பெட்டாலிங் ஜெயா கழக உறுப்பினர் லிம் இ வெய், 27, அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டம் 2012, செக்சன் 15(1) (பிஎஎ) கீழ் விசாரிக்கப்படுகிறார் என்று வழக்குரைஞர் வின்ஸ் டான் கூறினார்.
அவர் அளித்த தகவலின்படி, மாலை மணி 5 அளவில் லிம் போலீஸ் தலைமையகத்திற்கு வந்துசேர்ந்தார். சுமார் 40 நிமிடங்கள் வரையில் அவர் விசாரிக்கப்பட்டார்.
மலேசியாகினியிடம் பேசிய லிம், இவர் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவாவின் அரசியல் செயலாளர், விசாரணை அதிகாரி அவரின் பின்னணி மற்றும் அப்பேரணி பற்றிய அடிப்படைக் கேள்விகளைக் கேட்டதாகக் கூறினார்.
“என் மீது குற்றம் சுமத்தப்படும் என்பதற்கான அறிகுறி எததனையும் அவர்கள் காட்டவில்லை. அந்த நிலை ஏற்படாது என்று நம்புகிறேன், ஏனென்றால் பிஎஎயின் கீழ் ஒன்றுகூடுவதற்கான உரிமை எங்களுக்கு உண்டு”, என்று லிம் மேலும் கூறினார்
ஹரப்பான் பேரணியை நடத்துவதற்கு போலீஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.
எனினும், போலீஸ் எதிர்ப்புக்கு மாறாக பெட்டாலிங் ஜெயா மாநகர் ஆட்சி மன்றம் அத்திடலை பயன்படுத்த் அனுமதி அளித்தது.