டாக்டர் சேவியர் ஜெயக்குமார், கெஅடிலான் தேசிய உதவித் தலைவர், கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர், அக்டோபர் 17, 2017.
தீபாவளி நாள் மட்டுமின்றி நம் எதிர்காலத்தையே ஒளிரச்செய்யும் மாற்றத்தை நம் குழந்தைகளுக்கு வழங்குவதே, அவர்களுக்கு நாம் வழங்கும் சிறந்த தீபாவளி பரிசாகும். இந்நாளில் நமது அடுத்த தலைமுறை சிறப்புடன் வாழ, ஒரு மாற்றத்திற்கு வித்திடும் சக்தியை, நல்லாசியை எல்லா இந்துக்களுக்கும் இறைவன் வழங்கட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்,
இனிய தீபத்திருநாளைக் கொண்டாட, நாம் நமது வீடுகளையும் குடும்பத்தையும் தயார் படுத்தும் இவ்வேளையில், நமது அடுத்த தலைமுறை இந்நாட்டின் கௌரவமான குடிமக்களாக வாழ, வழியமைத்திடவும் மறந்துவிடக் கூடாது. அதற்கு, நம்மை, நம் குடும்பத்தைத் தயார் படுத்தும் தலையாயக் கடமையும் நமக்கு உண்டு.
சுதந்திரத்துக்கு முன் நம்மிடையே நிலவிய செழிப்பு இன்று இல்லை! என்பதை இளம் சமுதாயம் அறியாமல் இருக்கலாம், ஆனால், கீழ்க்காணும் சில புள்ளிவிவரங்கள் அதை உணர்த்தும். சுதந்திரத்திற்கு முன் நாட்டின் மொத்த ஏழ்மை நிலை 49 விழுக்காடு, ஆனால் அதில் இந்தியர்களுக்கு 0.2 விழுக்காடு மட்டுமே சொந்தம்!
ஆனால் இன்று, சுதந்திர மலேசியாவில் நாட்டின் ஏழ்மை 6.5 விழுக்காடு என்கிறது அரசாங்கம். ஆனால் ஆய்வுகள், இந்தியச் சமுதாயம் மட்டுமே ஏழ்மையின் பாழுங்குழியில் வீழ்ந்து கிடப்பதைக் காட்டுகிறது. நம்மிடமிருந்து உண்மை மறைக்கப்பட்டாலும், சில புள்ளி விவரங்களை ஆராய்ந்தால் அது தெளிவாகத் தெரியும்.*
சுதந்திர மலேசியாவில் 60 ஆண்டுகால பாரிசான் ஆட்சியில் இந்தியர்களின் கல்வி, பொருளாதாரச் சமூக மேம்பாடுகள் மகிழ்ச்சியை அளிக்கவில்லை. ஒரு கட்டுக்கோப்பு மிக்க, பொருளாதார வல்லமை கொண்ட சமுதாயம், இன்று சீரழிக்கப்பட்டு விட்டது. நாட்டின் புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் இந்தியச் சமுகம், கைவிடப்பட்ட குற்றவாளிகள் நிறைந்த நகைப்பிற்குரிய ஓட்டாண்டி இனமாக மாற்றப்பட்டு விட்டது என்பதை உறுதி படுத்துகிறது பிரதமர் நஜிப் இவ்வாண்டு ஏப்ரலில் வெளியிட்ட மலேசிய இந்தியப் பெருந்திட்டப் புள்ளிவிவரங்கள். .
சுதந்திர மலேசியாவில், நம் உதிரத்தை உரமாக இட்டு வளர்த்த தேசத்தில் இன்று எஞ்சி இருப்பது நமது தாய்மொழிக்கல்வி மட்டுமே, தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கம் இருந்தால், நமது பிள்ளைகள் கௌரவமான குடிமக்களாக இந்நாட்டில் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தால் நாட்டில் மாற்றத்தைக் கொணர்வதற்கு இன்றே முன்னெடுப்போம். அதற்கான சபதத்தை இத்தீபத்திருநாளில் மனதில் எடுப்போம். வாழ்க சமுதாயம், வளமுடன் வளரட்டும் நமது பிள்ளைகள்.
அனைத்து மலேசியர்களுக்கும், குறிப்பாக இந்துக்களுக்கு, எனது குடும்பம், மக்கள் சேவை மையம், மற்றும் (பக்காத்தான் ஹரப்பான்) நம்பிக்கை முன்னணி சார்பிலும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.