அக்டோபர் 27-ல் தியான் சுவா விடுதலை செய்யப்படுவார்

ஒரு மாதகால சிறை தண்டணைக்குப் பின், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா அக்டோபர் 27-ல் விடுதலை செய்யப்படுவார்.

நாடாளுமன்ற அமர்வு அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

“அவர் அக்டோபர் 27-ம் தேதி விடுவிக்கப்படுவார், நாடாளுமன்ற அமர்வுக்கு நிச்சயம் வருவார்,” என்று அவரின் வழக்குரைஞர் என்.சுரேந்திரன் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

கடந்த 2012, ஏப்ரல் 29-ல், பெர்சே 3.0 பேரணிக்கு அடுத்த நாள், மதியம் 2.30 வாக்கில், ஜாலான் செமாராக்கில் இருக்கும் புலாபோல் வளாகத்தைவிட்டு வெளியேறப் போலிசார் விடுத்த கட்டளைக்கு இணங்க மறுத்ததால்,  செவ்வாய்க்கிழமை, ஜனவரி 23, 2014 அன்று, அவர் செஷ்சன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

நீதிமன்றம் அவருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ரிம 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

பிகேஆர் துணைத் தலைவருமான தியான் சுவா, தண்டனைக்கு எதிரான தனது இறுதி முறையீட்டிலிருந்து விலக்கிக் கொண்டார் என்று முன்னதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.