மாட் சாபு: பாஸ் தலைவர்களுக்கு நான் கொடியவன், ஆனால் இரகசியமாக என்னிடம் கெஞ்சுகின்றனர்

 

அமனா கட்சியை தோற்றுவித்த ஈராண்டுகளுக்குப் பின்னர், கட்சியின் தலைவர் முகமட் சாபு இன்று ஓர் இரகசியத்தை வெளியிட்டார். பாஸ் கட்சியிலிருக்கும் சில தலைவர்களும் உறுப்பினர்களும் தம்மை ஒரு கொடியவன் என்று பகிரங்கமாக கூறிக்கொண்டிருந்த போதிலும், அவர்கள் தம்மை கட்சியில் மீண்டும் சேர்ந்துகொள்ளும்படி இரகசியமாக கெஞ்சுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

கெடாவில், அமனாவின் இரண்டாவது தேசிய மாநாட்டில் இறுதியுரையாற்றிய மாட் சாபு, மேற்கண்டவாறு கூறினார்.

பாஸ் மத்தியக்குழு உறுப்பினர்களும் தானும் சந்தித்துக்கொள்ளும் போது வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வது உண்டு. அவர்கள் தம்முடன் நன்கு பழகினர் என்றாரவர்.

“நாம் (அமனா) கட்சிக்கும் மக்களுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பாஸ்சிலிருக்கும் மக்கள் நமது நண்பர்கள்.

“நான் அடிக்கடி அவர்களை விமானநிலையத்தில் சந்தித்துக்கொள்வதுண்டு. நமக்குத் தெரியும் அவர்கள் பேசும் போது நம்மைச் சாடுவார்கள். ஆனால், விமான நிலையத்தில், தூரத்திலிருந்து, அவர்கள் வந்து எனது கையைக் குலுக்கி ‘சௌக்கியமா? போராட்டத்தை தொடருங்கள்’ என்று கூறுவார்கள்”, என்று மாட் சாபு மேலும் கூறினார்.

தம்மை கட்சிக்கு (பாஸ்) திரும்பி வரும்படி அவர்கள் கேட்பதுண்டு. இனிமேலும் அந்த சுவைமிக்க வாக்குறுதிகளுக்கு தாம் பலியாகப் போவதில்லை என்று கூறுவதுண்டு என்று கூட்டத்திலிருந்தவரிகளின் சிரிப்பு ஒலிக்கிடையே மாட் சாபு கூறினார்.

பாஸ் கட்சியிலிருந்த 38 ஆண்டு காலத்தில் கட்சியை வளர்த்து பலப்படுத்துவதற்காக அவர் அளித்த பங்களிப்பை விவரித்த மாட் சாபு, அக்கட்சியின் தற்போதைய நிலையைக் காணும் போது வருத்தப்படுவதாக கூறினார்.

அமனா 2015 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து, பாஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அமனாவையும் டிஎபியையும் அவர்களுடைய கட்சியின் எதிரிகள் என்று மேடையில் பேசி வருகின்றனர்.

ஆனால், பாஸ் கட்சியிலுள்ள தனிப்பட்ட தலைவர்கள் அமனாவுடன் நட்பான முறையில் இருந்து வருகின்றனர்.

பொகோக் சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் மற்றும் இதர மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் நேற்று நடைபெற்ற அமனா மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.