இவ்வாண்டு அக்டோபர் 6வரை, இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஸுடன் தொடர்புள்ள 95 மலேசியர்கள் உள்பட, மொத்தம் 346 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
தவிர, 53 மலேசியர்கள் ஈராக்கிலும் சீரியாவிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட தகவலும் உள்துறை அமைச்சுக்குக் கிடைத்திருப்பதாக அவர் சொன்னார். அவர்களில் 34பேர் அந்நடவடிக்கைகளில் பலியானார்கள்.
மலேசியா இண்டர்போலுடனும் மற்ற நாடுகளுடனும் ஒத்துழைப்பதன் வழியும் கண்காணிப்பு முறைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலமாகவும் பயங்கரவாத மிரட்டலை அடக்கி வைத்துள்ளது என உள்துறை அமைச்சருமான ஜாஹிட் கூறினார்.
இன்று மக்களவையில், அன்னுவார் மூசா(பிஎன் – கெதெரே)வின் துணைக் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.