பொருள் , சேவை வரி (ஜி.எஸ்.டி) மற்றும் வாழ்க்கை செலவினங்கள் அதிகரிப்பால், அதிகமான மக்கள் இன்று , தனியார் மருத்துவமனைகளை விட, அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறவே விரும்புகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவை தனியார் மருத்துவமனையிலிருந்து அரசாங்க மருத்துவமனைகளுக்கு மாற பல நோயாளிகளைத் தூண்டியுள்ளதாக, மலேசிய மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் நாயுடு தெரிவித்தார்.
அரசாங்க மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரிப்பு
“அரசாங்க மருத்துவமனைகளை நாடும் மக்களின் எண்ணிக்கை 30% அதிகரித்திருப்பதாக, சுகாதார அமைச்சின் தரவுகளும் குறிப்பிட்டுள்ளன,” என அவர் ஃப்.எம்.தி.-யிடம் கூறினார்.
அரசாங்க மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரிப்பு மற்றும் வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு ஆகியவற்றால் மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டாக்டர் ரவீந்திரன் விளக்கப்படுத்தினார்.
“நோயாளிகளின் எண்ணிக்கை 30% அதிகரித்தால், மருந்துகளின் விநியோகமும் 30% ஆக உயர்த்தப்பட வேண்டும். இருப்பினும், வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு குறைப்பு காரணமாக, மருந்துகளை விநியோகிப்பதில் கவனமாக இருக்க வேண்டியுள்ளது,” என்றார் அவர்.
“மருத்துவமனைகளில் மருந்து இல்லாமல் இல்லை, ஆனால், அவை மிகவும் கவனமாகவும் நியாயமாகவும் விநியோகிக்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
வரவு செலவுத் திட்டத்தில், சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீட்டை உயர்த்தவும், சுகாதார பராமரிப்புக்கான ஜி.எஸ்.டி.-ஐ அகற்றவும் வேண்டும் என்று, அவர் பிரதமர் நஜிப் ரசாக்கை வலியுறுத்தினார்.
“சுகாதாரப் பராமரிப்புக்கு ஜி.எஸ்.டி. வசூலிக்க மாட்டோம் என்ற அவர்களின் ஆரம்ப நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும். இது மக்கள் சுகாதார வசதிகளைப் பெற உதவும்.”
மருந்துகளின் செலவு மிக அதிகம்
அரசாங்க ஊழியர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சிகிச்சை தேவைப்படும் மக்களுக்குக் கடினமான நேரம் இது என்று பொருளாதார ஆய்வாளர் ரேமன் நவரத்னம் கூறினார்.
“மருந்துகள் பற்றாக்குறையாலும் சிகிச்சைக்கு அதிக செலவு ஆவதாலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். காயத்திற்குக் கட்டும் துணியைக் கூட நோயாளிகளே வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது,” என்று அவர் ஃப்.எம்.தி.-யிடம் தெரிவித்தார்.
சுகாதாரத் துறைக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் அளவுக்கு, அரசாங்கத்தின் பணப் புழக்கம் அவ்வளவு மோசமாக உள்ளதா, என அவர் கேள்வி எழுப்பினார்.
“அரசாங்கத்திற்கு நிதி பற்றாக்குறையா? அரசாங்கம் அத்தியாவசியமான தேவைகளுக்குப் பட்ஜெட்டில் முன்னுரிமைகள் தர முடியாதா? குறைந்த வருமானம் பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஏழை மக்களைப் பாதிக்கும் இந்தச் சிக்கலை 2018 பட்ஜெட் தீர்க்குமா?” என அவர் கேட்டார்.
“இச்சிக்கலை களைய, கியுபேக்ஸ் என்ன செய்கிறது? அரசாங்க ஊழியர்கள் நாட்டிற்குத் தியாகம் செய்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது, முதுமை காலத்தில் அவர்களுக்கு அதிக பாதுகாப்புமும் அரவணைப்பும் தேவை.”
“அவர்கள் வாக்காளர்கள் என்பதை மறக்க வேண்டாம். அரசாங்க மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருக்கும், மில்லியன் கணக்கான அரசாங்க ஊழியர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் அக்கறையுடன் இருங்கள்,” என்று ரேமன் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார்.
நாட்டில் மருந்துகள் & மருத்துவப் பொருள்கள் பற்றாக்குறை
பெயர் கூற விரும்பாத ஒரு மருத்துவர், மருந்துகள், மருத்துவப் பொருட்கள் மற்றும் ஆய்வக சோதனைகளுக்கான பட்ஜெட்டில் பற்றாக்குறை இருப்பதை ஒப்புக் கொண்டதாகவும் ஃப்.எம்.தி. கூறியுள்ளது.
“வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு குறைக்கப்படுவதால், நாட்டில் மருந்துகளுக்குப் பற்றாக்குறை உள்ளது,” என்றார் அவர்.
2016-ஆம் ஆண்டிற்கான வரவு செலவில் 2015-க்கும் குறைவாகவும், 2017-க்கான வரவு செலவில் 2016-க்கும் குறைவாகவும் நிதி ஒதுக்கப்பட்டது. குறைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் பற்றி எங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது,” என்றும் அந்த அரசாங்க மருத்துவர் கூறியதாக ஃப்.எம்.தி. செய்தி வெளியிட்டுள்ளது.
சில மருத்துவ ஆய்வுகள் & சோதனைகள் தவிர்க்கப்படுகின்றன
நெகிரி செம்பிலானில் உள்ள ஒரு மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அவர், இதனால் சில மருத்துவச் சோதனைகள் மற்றும் ஆய்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் ஒரு சுகாதாரத் திட்ட ஆலோசகர், சுகாதார உபகரணங்களிலும் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
“நிதி பற்றாக்குறையால் , பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகளை வாங்க முடியவில்லை. அதனால், மற்ற மருத்துவமனைகளுடன் உபகரணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது,” என்று அவர் கூறினார்.