இன்று காலை வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் இரண்டு தொழிற்சாலை பேருந்துகளும் ஒரு வேனும் மோதிக்கொண்டதில் எண்மர் கொல்லப்பட்டனர்.
அவ்விபத்து காலை மணி 5.40 அளவில் பினாங்கு, செபராங் பிறையில் கிலோமீட்டர் 147-இல், ஜூரு டோல் சாவடிக்கு முன்னதாக நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது.
பேருந்துகள் பிறை சோனி தொழிற்சாலைக்கும் பாயான் லெப்பாஸில் உள்ள பிளக்சஸ் தொழிற்சாலைக்கும் வேலையாள்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்ததாக பினாங்கு தீயணைப்பு, மீட்புத்துறை துணைத் தலைவர் முகம்மட் ஷோக்கி ஹம்சா தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் ஆன்லைன் கூறியது.
அறுவர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர், செபராங் ஜெயா மருத்துவமனையில் காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இறந்தனர்.
விபத்தில் மேலும் 33 பேர் காயமடைந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே என்எஸ்டி ஆன்லைன், நேப்பாள தொழிலாளர்களையும் இந்தோனேசிய தொழிலாளர்களையும் ஏற்றிச் சென்ற பேருந்துகளில் ஒன்று இயந்திரக் கோளாற்றின் காரணமாக இடப்புற தடத்தில் நின்று போனதாக செப்ராங் பிறை தெங்கா போலீஸ் தலைவர் ஏசிபி நிக் ரோஸ் அஸ்ஹான் நிக் அப்துல் ஹமிட் கூறியதாக தெரிவித்தது.
“அதே வேளை 15 தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற இன்னொரு பேருந்து சரியான நேரத்தில் பிரேக் போடாததால் முதல் பேருந்துடன் மோதி அதை சாலையில் வலப்புறத்துக்குத் தள்ளிக்கொண்டுச் சென்றது”, என்றாரவர்.
இறந்த 23 பேரும் பெண்கள். காயமடைந்த 33 பேரில் 23 பேர் கடும் காயமடந்தனர். மற்றவர்கள் சொற்ப காயங்களுக்குச் சிகிச்சை பெற்றனர்.