கேமரன் மலையில் ‘பிரிமா 1மலேசியா’ வீடுகள் ரிம 2 இலட்சத்திற்கும் மேல் விலை போவதால், அவற்றை வாங்க வசதியில்லாமல் கேமரன் மலை மக்கள் அல்லல்படுகின்றனர்.
கேமரன் மலை மாவட்ட அலுவலகத்தில் பலமுறை விண்ணப்பம் செய்தும், தங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அம்மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இன்று, மதியம் 12 மணியளவில், 22 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 40 பேர், இதுதொடர்பாக பிரதமரிடம் கலந்துபேச புத்ராஜெயா, பிரதமர் துறை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கேமரன் மலை கிளையின் செயலாளர் சுரேஸ், “நாங்கள் பிரதமர் நஜிப்பிடம் கோரிக்கை மனு எதனையும் சமர்ப்பிக்க வரவில்லை. கேமரன் மலை ‘பிரிமா 1மலேசியா’ வீடுகள் பற்றி அவருடன் கலந்துபேசவே இங்கு வந்தோம்,” என்றார்.
கேமரன் மலையில் இந்த வீடுகள் அதிக விலையில் விற்கப்படுவதாகவும், அவற்றை வாங்க பி40 பிரிவைச் சேர்ந்த மக்களால் இயலவில்லை என்றும் அவர் சொன்னார்.
எனவே, பிரதமர் நஜிப் துன் ரசாக் இப்பிரச்சனையில் தலையிட்டு, ஒரு நல்ல முடிவைத் தர வேண்டுமென்று அம்மக்கள் விரும்புகின்றனர்.
இதுதொடர்பாகக் கலந்துபேச, பிரதமரிடம் நாள் கேட்டு, கடந்த 3 மாதங்களில் மூன்று முறை கடிதம் அனுப்பியதாகவும், ஆனால், இதுவரை அவரிடமிருந்து எந்தவொரு பதிலும் வராததால், இன்று இங்கு வந்ததாகவும் சுரேஸ் சொன்னார்.
இன்று புத்ராஜெயா வந்தவர்களில், லாரி ஓட்டுநரான அன்பழகன் தங்கவேலுவும் ஒருவர்.
அவர் கூறியதாவது, “நான், என் மனைவி, பிள்ளைகள் எல்லோரும் இங்கேயேப் பிறந்தவர்கள். கடந்த 49 வருடங்களாக கேமரன் மலையில் வசிக்கிறேன். ஏழு முறை இந்த ‘பிரிமா 1மலேசியா’ வீட்டுக்கு விண்ணப்பித்துள்ளேன். ஆனால், ஒவ்வொரு முறையும் என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது,” என்றார்.
“என்னுடைய மாத வருமானம், உணவு, வீட்டு வாடகை, பிள்ளைகளுக்கான பள்ளி செலவு எனக் குடுமக்ச் செலவுக்கேப் போதுமானதாக உள்ளது, இதில் ரிம 20,000 முன் பணம் கட்டி, ரிம 2 லட்சம் , 2 லட்சத்து 30 ஆயிரம் விலையில் நான் எப்படி வீடு வாங்குவது,” என அவர் கேள்வி எழுப்பினார்.
மலிவு விலை வீட்டிற்கு ஏன் முயற்சிக்கவில்லை என்று கேட்டதற்கு, “அப்படி ஒன்று கேமரன் மலையில் இருப்பதாகவே தெரியவில்லை. இந்தப் பிரிமா அடுக்குமாடி வீடுகள்தான் குறைந்த விலை வீடுகள்,” என்று கேள்விபட்டதாக அவர் கூறினார்.
“சில வருடங்களுக்கு முன், கேமரன் மலை மாவட்ட அலுவலகம் 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக அறிந்து, அதற்கும் விண்ணப்பித்து இருந்தேன். ஆனால், அதுவும் கிடைக்கவில்லை,” என்று வருத்தம் தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக கேமரன் மலையில் வசித்துவரும் அஞ்சலை சுப்ரமணியம், தான் முன்பணம் ரிம 20,000-ஐ செலுத்தி, வங்கி கடனுக்கு விண்ணப்பம் செய்ததாகவும், தனது வருமானம் போதுமானதாக இல்லை என்பதால் வங்கி, கடன் கொடுக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
“இதுவரை 2 முறை விண்ணப்பித்துவிட்டேன். பஹாங், கேமரன் மலையில் ரிம 40,000 – ரிம 80,000 மலிவு விலை வீடுகள் இருப்பதாகத் தெரியவில்லை,” என்றும் அஞ்சலை கூறினார்.
ரிங்லட்டிலிருந்து வந்திருந்த தனலட்சுமி கிருஸ்ணன், 36 வருடங்களாக அங்கு வசித்து வருவதாகத் தெரிவித்தார்.
“எங்களால் 2 லட்சம் விலையில் வீடுகள் வாங்க முடியாது. பிரிமா 1மலேசியா’ வீடுகள், அரசாங்க வீடுகள் என்று கூறுகின்றனர், ஆனால் அதிக விலையில் விற்கின்றனர். 2 லட்சம்தான் இங்கு குறைந்த விலை, அதுபற்றி பிரதமரிடம் பேசவே, இன்று இங்கு வந்தோம்,” என்று தனலட்சுமி கூறினார்.
பி.எஸ்.எம். கேமரன் மலை கிளையிடம் இதுவரை 50 குடும்பங்கள் இவ்வீடுகள் பிரச்சனைக்காகப் பதிந்துள்ளதாக சுரேஸ் தெரிவித்தார்.
“ ‘பிரிமா 1மலேசியா’ வீடுகளை 50% அரசாங்க மானியத்துடனும், மீதமுள்ள 50% பணத்தை அரசாங்கக் கடனுதவியுடனும் இவர்களுக்கு விற்க வேண்டும்,” என்று சுரேஸ் ஆலோசனைக் கூறினார்.
“இந்த பி40 குடும்பங்களுக்கு நிரந்தர வருமானம் இல்லை, போதிய ஆவணங்கள் இல்லை, எனவே தனியார் வங்கிகள் இவர்களுக்குக் கடன் கொடுக்க தயங்குகின்றன. ஆக, இவர்களின் பிரச்சனையைக் களைய வேண்டுமானால், அதற்கு அரசாங்கம்தான் ஒரு வழியைக் காட்ட வேண்டும். அதனால்தான், நாங்கள் இப்பிரச்சனையில் பிரதமர் தலையிட வேண்டுமெனக் கேட்கிறோம்,” என்று சுரேஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே, பிரதமர் துறை இலாகா நாளை மின்னஞ்சல் வழி பதிலளிப்பதாகக் கூறியுள்ளது என்று சுரேஸ் தெரிவித்தார்.
ஒரு மாத காலத்திற்குள் பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர்கள் உறுதி அளித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.