இன்று நாடாளுமன்றத்தில் மலேசிய அறிவுசார்ந்த சொத்து கோர்பொரேசன் மசோதா 2017 தாக்கல் செய்யப்பட்ட போது அதை வழிமொழிவதற்கு நாடாளுமன்றத்தில் அமைச்சர்களோ துணை அமைச்சர்களோ இல்லாததால் நாடாளுமன்றம் அதன் நடவடிக்கைகளை சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.
துணை அமைச்சர் ஹென்றி சம் அந்த மசோதாவை இரண்டாவது வாசிப்புக்காக தாக்கல் செய்தார்.
அப்போது அமர்வுக்கு தலைமையேற்றிருந்த மக்களவையின் துணைத் தலைவர் இஸ்மாயில் முகமட் சைட், தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை வழிமொழிவதற்கு ஓர் அமைச்சரை அல்லது துணை அமைச்சரைத் தேடி சுற்றுமுற்றும் பார்த்தார். பின்னர், “யார் இந்த மசோதாவை வழிமொழிபவர்”, என்று கேட்டார்.
அப்போது விழித்துக்கொண்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கூட்டணியின் அமைச்சர்கள் அவையில் இல்லாததைக் கண்டு கிண்டல் செய்யத் தொடங்கினர்.
மசோதாவை திரும்பப் பெறுங்கள். அவையின் நடவடிக்கையை நிறுத்தி வைக்க முன்மொழிகிறேன். இல்லை என்றால் இன்று வரலாற்றில் இடம்பெறும் என்று (பிகேஆர்-காப்பார்) ஜி. மணிவண்ணன் கூறினார்.
இன்னொரு உறுப்பினர், இது நாடாளுமன்றத்திற்கு அவமானம் என்றார். மேலும் ஒருவர், அனைத்து துணை அமைச்சர்களும் இன்று சோம்பேறிகளாகி விட்டனர் என்றார்.
நகைச்சுவையோடு, தாம் அந்த அறைக்குப் போக வேண்டியிருப்பதால் அவையை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் இஸ்மாயில் அறிவித்தார்.
மக்களவை மீண்டும் தொடங்கிய போது, துணை அமைச்சர் பி. கமலநாதன் அங்கு இருந்தார்.
மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது கமலநாதன் அவையில் இல்லை என்று கூச்சலிட்டனர்.
இறுதியில், அவைத் தலைவர் ஆட்சேபங்களை உதறித்தள்ளி விட்டு, மசோதா மீதான விவாதத்தைத் தொடரும்படி உத்தரவிட்டார்.