பாஸ்தர் கோ கடத்தலில் கைதான 4 சந்தேக நபர்களும் போலிஸ் பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டனர் என பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த விசாரணை அதிகாரி ஏஎஸ்பி சுபாரி முகமட் கூறினார்.
கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி கடத்தப்பட்ட கோக் வழக்கில், ஈடுபட்டதற்கான எந்த தகவலும் விசாரணையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், அச்சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“நீதிமன்றத்தில் 2 முறை கோரிக்கை வைத்து, 13 நாள்கள் அவர்களைத் தடுத்து வைத்து, விசாரணை, புலனாய்வு செய்து, புலனாய்வு ஆவணங்களை அட்டர்னி ஜெனரல் இலாகாவிடம் ஒப்படைத்தோம்,” என்றார் அவர்.
நேற்று, மலேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (சுஹாகாம்) பொது விசாரணையில், “கோ கடத்தல் வழக்கு தொடர்பாக எந்த ஒரு குறிப்பும் ஆதாரமும் இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் குற்றவியல் புலனாய்வு இலாகாவின் தலைவர், எஸ்ஏசி பட்ஸில் அஹமத்தின் உத்தரவின் பேரில், அந்த 4 சந்தேக நபர்களும் விடுவிக்கப்பட்டதாக 7- ஆவது சாட்சியான அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 25 -ம் தேதி, அப்போதைய போலிஸ்படை தலைவர் காலித் அபு பக்கார், கடத்தல் கும்பல் ஒன்றுக்கு எதிரான நடவடிக்கையின் போது, அந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
ஜூன் 17-ல், கம்போங் வேங் டாலம், கெடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, முக்கிய சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சந்தேக நபரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சில பொருட்கள் கோவின் வீடு, அவருடைய இரண்டு வாகனங்களின் படம் மற்றும் ‘எண் 5515 டி’ என்ற ஒரு வாகனப் பதிவு உரிமம் தட்டும் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் கூறினார்.
சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையினரின் சோதனையின் போது கைதான 12 மலாய்க்காரர்களையும் விசாரணைக்கு உட்படுத்தியதாக போலிஸ் தரப்பு தெரிவித்தது.
பிப்ரவரி 13 -ம் திகதி, கெளானா ஜெயா போலீஸ் குடியிருப்பு வளாகத்திலிருந்து சுமார் 100 மீட்டரில், ஜாலான் SS4B / 10- ல், முகமூடி அணிந்த நபர்களால், ஹோண்டா அக்கார்டு கார் எண் ST 5515 டி-யில் பயணித்த கோ கடத்தப்பட்டார்.
கெளனா ஜெயாவில் ஒரு நண்பரின் வீட்டிற்கு பயணிக்கையில் கோ கடத்தப்பட்டார். வீடியோவில் பதிவான இச்சம்பவத்தில், 10- க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் 7 வாகனங்களை உள்ளடக்கிய, நேர்த்தியாக திட்டமிடப்பட்ட ஒன்றாகத் தெரிந்தது.
7 வாகனங்களில், 5-ன் பதிவு எண்கள் கண்டறியப்பட்டது. அதில் ஒன்று போலி பதிவு எண்ணைப் பயன்படுத்தியுள்ளதாகவும் சுபாரி தெரிவித்தார்.
கோவின் குடும்பம் தகவல் தருபவர்களுக்கு RM100,000 வெகுமதி அளிப்பதாக அறிவித்திருந்தது. இன்றுவரை, கடத்தல்காரர்களிடமிருந்து பணத்திற்கான எந்தவித கோரிக்கையும் வராததால், கடத்தல்காரர்களின் நோக்கம் பணம் அல்ல என்று தெரிகிறது.