பட்ஜெட் 2018 : கிட்டதட்ட 100 இஸ்லாமிய அரசு சாரா அமைப்புகள் ஆதரவு

கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2018-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கிட்டதட்ட 100 இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புகள் பிரதமரிடம் மனு சமர்பித்துள்ளன.

இன்று புத்ராஜெயாவில், அக்கூட்டமைப்பைப் பிரதிநிதித்து , தீபகற்ப மாணவர் கூட்டமைப்பின் (காபுங்கான் பிலாஜார் செமனாஞ்ஞோங்) தலைவர், ஷம்ப்ரி முகமட் இசா, நிதியமைச்சருமான நஜிப்பிடம் அந்த மனுவைச் சமர்ப்பித்தார்.

அறிக்கை கையளிப்பைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், இந்தப் பட்ஜெட் மக்களுக்கு, குறிப்பாக, மலாய் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால், அக்கூட்டணியில் இருக்கும் அனைத்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்ததாக சொன்னார்.

“இந்த வரவு செலவுத் திட்டத்தை, ‘தேர்தல் வரவு செலவுத் திட்டமாக’ நாங்கள் பார்க்கவில்லை, மாறாக, ‘2050 தேசிய உருமாற்று’ திட்டத்திற்கான பட்ஜெட்டாகப் பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.