எதிர்க்கட்சி மீதான தாக்குதல்களுக்கு இடையே, 2018 வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர், நஜிப் ரசாக் போலல்லாமல், சிலாங்கூர் மந்திரி பெசார் முகம்மது அஸ்மின் அலி , சிலாங்கூர் 2018 பட்ஜெட்டை, மாநில அரசின் மீது கவனம் செலுத்தி தாக்கல் செய்தார்.
இருப்பினும், நேற்று பிற்பகல் ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில், மாநில வரவு செலவு திட்டத்தைத் தாக்கல் செய்தபோது, ஜி.எஸ்.டி.-யைத் தொட்டு பேசி, மத்திய பட்ஜெட்டை அவர் விமர்சித்தார்.
அக்டோபர் 27-ம் திகதி, தனது பட்ஜெட் தாக்கலின்போது, ‘அனைத்து வரவு செலவுத் திட்டங்களுக்கும் தாய்’ என 2018 வரவு செலவுத் திட்டத்தை நஜிப் குறிப்பிட்டதை, அஸ்மின் நினைவுகூர்ந்தார்.
அந்த நேரத்தில், அரசாங்கத்தின் 2018 பட்ஜெட்டை நஜிப் மிக மிக விரிவானது, வெற்றிகரமானது என்று விவரித்தார்.
இருப்பினும், அஸ்மின் அதனை மறுத்ததோடு; மக்கள் அனுபவித்து வரும் வாழ்க்கை செலவினங்களின் உயர்வைக் கையாள 2018 வரவுசெலவுத் திட்டம் தவறிவிட்டது என்றார்.
“பொருள்களின் விலை ஏற்றம், மக்களுக்கு சுமையாக இருக்கிறது; வாழ்க்கை செலவினங்கள் உயர பொருள், சேவை வரியும் (ஜி.எஸ்.டி.) ஒரு காரணமாகும்.
“ஆக, ‘அனைத்து பட்ஜெட்டுகளின் தாய்’யாலும், கையாள முடியாத, ‘வாழ்க்கைச் செலவினங்களின் தாய்’ இந்த ஜி.எஸ்.டி.,” என அவர் வர்ணித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் பொருள் , சேவை வரிக்கு பதிலாக, விற்பனை, சேவை வரியை மீண்டும் அமலுக்கு கொண்டுவருவதில் உறுதியாக இருக்கிறது.
கடந்த அக்டோபர் 25-ல், ஹராப்பானின் ‘மாற்று வரவு-செலவுத் திட்ட’த்தில் விற்பனை, சேவை வரியை மீண்டும் கொண்டுவருவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.