60 % பள்ளிகள் ‘கேபாட்’ பிரச்சனையை எதிர்கொண்டதற்கு ஆசிரியர்களின் பலவீனமும் காரணம்

உயர் நிலை சிந்தனை திறன்களின் (கேபாட்) சிறந்த நடைமுறை மதிப்பீட்டு முடிவுகளில், 169 பள்ளிகள் ‘நல்ல’ மற்றும் ‘சிறந்த’ அடைவு நிலைகளுக்குக் கீழே இருப்பதற்கு, ஆசிரியர்களின் ‘ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் புரிதல்’ ஆகியவையும் காரணங்களாகும்.

பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தர உத்தரவு அதிகாரிகளால் மதிப்பீடு செய்யப்பட்ட 282 ஆரம்ப , இடைநிலைப் பள்ளிகளை இந்த 60% புள்ளிவிவரங்கள் பிரதிநிதிக்கின்றன என்று துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன் கூறியுள்ளார்.

“அந்த 282 பள்ளிகளில், 40% பள்ளிகள் மட்டுமே நல்ல மற்றும் சிறந்த நிலைகளை அடைந்துள்ளன, 60% பள்ளிகள் இன்னமும் சிக்கல்களை எதிர்நோக்குகின்றன,” என்றார் அவர்.

“இந்தப் பிரச்சினைகளுக்கு ஆசிரியர்களின் ‘ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் புரிந்துகொள்ளுதல்’ நிலையும் காரணம் என மதிப்பீடுகளில் தெரியவந்துள்ளதால், அதனைச் சரிசெய்வதற்கான திட்டங்கள் இப்போது நடைபெற்று வருகின்றன. கல்வி அமைச்சின் வழி மட்டுமின்றி, வெளி பயிற்றுவிப்பாளர்களாலும் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றனர்,” என அவர் கூறினார்.

“பயிற்சி பெற்ற மற்றும் ‘கேபாட்’ கலாசாரத்தை நன்கு புரிந்து கொண்ட ஆசிரியர்கள், கல்வி அமைச்சின் தூதர்களாக மற்ற ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பர்,” என்று கமலநாதன் மேலும் கூறினார்.

எனினும், பள்ளியில் ஆசிரியர்களுக்கு,  SIP+ மற்றும் SISC+ மூலம் ‘கேபாட்’ அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, ‘கேபாட்’-ன் செயலாக்க மதிப்பீடு, 2017 யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவின் பகுப்பாய்வுகள் கிடைக்கப்பெற்ற பின்னரே, அதன் தரம், சீரான தன்மை, துல்லியம், நேர்மையை கணக்கிட முடியுமே தவிர; கடந்தாண்டு தேர்வு முடிவுகளை வைத்து அவற்றை ஒப்பீடு செய்ய முடியாது.

அதேப்போல, கடந்த 2016-ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவுகளையும் முந்தைய ஆண்டுகளோடு ஒப்பீடு செய்ய முடியாது, காரணம் கடந்தாண்டு தேர்வின் வடிவமைப்பும், பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டு கருவிகளும் தொடக்கப் பள்ளி தரநிலை பாடத்திட்டத்தின் (கே.எஸ்.எஸ்.ஆர்.) அடிப்படையில் அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.