கேபாட் : தோற்றது கல்வி அமைச்சு, ஆசிரியர்கள் அல்ல, காப்பார் எம்.பி. கூறுகிறார்

உயர்நிலை சிந்தனை திறன்களை (கேபாட்) சிறப்பாக செயல்படுத்துவதில் தவறியது கல்வி அமைச்சுதான், எனவே, கவனிக்கப்பட வேண்டியது அவ்வமைச்சுதான்.

காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன், “உண்மையான பலவீனம், ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புமுறை மற்றும் கல்வி கொள்கையில் உள்ளது என்பதால், அரசாங்கம் ஆசிரியர்களைச் சுட்டிக்காட்ட வேண்டாம்,” என்றார்.

” ‘கேபாட்’ மதிப்பீடு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள ஆசிரியர்கள் விரும்புகிறார்களா? அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் போதுமான பயிற்சிகள் ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டதா? ஆசிரியர் மத்தியில்  அதற்கான புரிதல் உள்ளதா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“ஆசிரியர்களுக்கு அதிக அளவில் சிந்தனைத் திறன் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படவில்லை என்றால், அவர்கள் எப்படி மாணவர்களுக்கு ‘கேபாட்’ பயிற்சியளித்து, மாணவர்களின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும்?” என்று, இன்று சினார் ஆன்லைனுக்கான ஒரு பேட்டியில் மணிவண்ணன் கூறினார்.

கடந்த புதன்கிழமை, 2013-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கேபாட்’, 60% பள்ளிகளில் பிரச்சினையை எதிர்நோக்குவதற்கு ஆசிரியர்களின் பலவீனமே காரணம் என்று, துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன் கூறியிருந்தார்.

கமலநாதன் தற்போது ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார்.

‘கேபாட்’-ஐ அனைத்து தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்த கல்வி அமைச்சு பல முயற்சிகள் எடுத்துவருகிறது.

இதற்கிடையில், நாட்டில் கற்றல் முறைகளை எளிதாக்கும் வகையில், தற்போதுள்ள கல்வி முறைமையை அரசாங்கம் முழுமையாக மாற்றியமைக்க வேண்டுமென மணிவண்ணன் கூறினார்.

தற்போதுள்ள கல்விக் கொள்கையை, அமைச்சர்கள் அடிக்கடி மாற்றியமைத்து வருவதால், ஆசிரியர்களும் மாணவர்களும் புதிய கொள்கையிலானப் பாடங்களைக் கையாளுவதில் பின்தங்கி நிற்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” ‘கேபாட்’ மதிப்பீட்டை நடைமுறைப்படுத்தியதால் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்களே, அடுத்ததாக ஆசிரியப் பெருமக்கள்.”

” உண்மையில், நம் நாட்டின் கல்வி முறைமை முழுமையாக மாற்றியமைக்க வேண்டிய ஒன்று. அப்படி மாற்றியமைக்கப்படும் ஒன்று, எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.