குகன் வழக்கின் தீர்ப்பால் அதிர்ச்சியடைந்தார் முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி

 

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் தடுப்புக்காவலில் அடித்துக் கொல்லப்பட்ட எ, குகனின் குடும்பத்தினருக்கு அக்குற்றத்துக்கான தண்டனையாக நீதிமன்றம் ரிம300,000 இழப்பீடு வழங்கி தீர்ப்பளித்திருந்தது. அந்த இழப்பீட்டை அளிக்க மறுத்து பெடரல் உச்சநீதிமன்றம் அளித்துள்ள பெரும்பான்மை தீர்ப்பால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கூறினார்.

உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த இந்த இழப்பீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிலைநிறுத்தியிருந்தது.

இத்தீர்ப்பின்மீது கருத்துரைத்த முன்னாள் நீதிபதி முகமட் ஹிசாமுடின் முகமட் யுனுஸ், இத்தீர்ப்பில் கோமன் லா எனப்படும் எழுதப்படா சட்டக் கோட்பாடுகளின் (Common law principles)அடிப்படையில் நீதிபதி ஸைனுன் அலி அளித்த மாறுபட்ட தீர்ப்புடன் தாம் ஒத்துப்போவதாகக் கூறினார்.

“அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கும் உரிமையை மீறினால் (இந்த வழக்கு அது சம்பந்தப்பட்டதாகும்) அக்குற்றத்தைப் புரிந்தவருக்கு எதிராகத் தண்டனையாக இழப்பீடு வழங்கும் உரிமையை நீதிமன்றம் பெற்றிருக்கிறது என்ற நீதிபதி ஸைனுனின் மாறுப்பட்ட தீர்ப்பை நான் முழுமனதுடன் ஒத்துக்கொள்கிறேன்”, என்றார் முன்னாள் நீதிபதி.

“நீதிபதி ஸைனுன் சட்டத்தை சரியாக எடுத்துக்கூறியுள்ளார். இதுதான் எப்போதுமே கோமன் லாவின் (எழுதப்படாத சட்டத்தின்) நிலைப்பாடாக இருந்து வருகிறது.

“பெடரல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நான் அதிர்ச்சியும் ஆழந்த துயரமும் அடைந்துள்ளேன்’, என்று அந்த முன்னாள் நீதிபதி மலேசியாகினியிடம் கூறினார், மேலும், காலஞ்சென்ற குகனுக்கும் அவரது குடும்பத்திற்கும் இங்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்றாரவர்.