பூச்சோங் முரளிக்கு ஒரு மாத சிறை தண்டனை!

பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியம், 49, நீதிமன்ற தடையுத்தரவை மீறி அவரது முகநூலில் ஓர் இந்துக் கோயிலின் தலைவருக்கு எதிராக அவதூறான சொற்களைப் பதிவு செய்து மற்றும் தவறான வழிக்கு இட்டுச்செல்லும் சாட்சியம் அளித்து நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். நந்தபாலன் அவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதித்தார்.

முரளி அவரது சத்தியப்பிரமாணத்தின் வழி நீதிமன்றத்திற்கு தவறான வழிகாட்டிய குற்றத்தைப் புரிந்துள்ளார் என்று நீதிபதி எஸ். நந்தபாலன் அவரது தீர்ப்பில் கூறினார்.

பிகேஆர் தொகுதி முன்னாள் தலைவரான  முரளிக்கு இன்று வெள்ளிக்கிழமையிலிருந்து ஒரு மாத தடுப்புக்காவல் தண்டனைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், முரளி பாதுகாப்பு பந்தமாக ரிம50,000 ஐ திங்கள்கிழமைக்குள் செலுத்த வேண்டும் மற்றும் செலவுத் தொகையாக ரிம20,000 வாதி ஆர். நடராஜாவுக்கு, 71, கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஜூலை 29, 2016 இல், ஒரு முழு விசாரணைக்குப் பின்னர் முரளிக்கு நீதிபதி நந்தபாலன் ஒரு நிரந்தரத் தடை விதித்திருந்தார். அத்தடையை மீறி ஶ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம் கோயில் தலைவர் நடராஜாவைப் பற்றி அவர் ஏழு வெவ்வேறான தடவைகளில் அவதூறான சொற்களை அவரது முகநூலில் பதிவு செய்த குற்றத்தை முரளி புரிந்திருக்கிறார் என்று நீதிபதி கூறினார்.

மேலும், ஜூலை 29, 2016 இல் அளிக்கப்பட்ட தீர்ப்பு அமலாக்கத்தைத் தள்ளி வைக்கக் கோரி முரளி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அவரது சத்தியப்பிரமாணத்தில் உண்மையைக் கூறாததற்கவும் நடந்த முக்கியமான செயல்களை வெளிப்படுத்தாததற்காவும் முரளி குற்றவாளி என்றார் நீதிபதி.

முன்னதாக, முரளியின் வழக்குரைஞர் கே. சரஸ்வதி, அவரது கட்சிக்காரர் நெஞ்சு வலிக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதால், தண்டனை அளிக்கப்படுவதை திங்கள்கிழமைக்கு தள்ளிவைக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

தமது கட்சிக்காரர் இல்லாமல், அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டணையைத் தாம் ஆட்சேபிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

எனினும், நடராஜாவின் வழக்குரைஞர் ஜி. ராஜசிங்கம் நீதிமன்றம் விசாரணையைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார், ஏன்னென்றால் எதிர்தரப்பு வழக்குரைஞர் அவரது கட்சிக்காரர் (மருத்துவமனையில்) சேர்க்கப்பட்டிருப்பதற்கான ஆதாரம் எதனையும் கொண்டுவரவில்லை என்றார்.

இதற்கு  முன்பு மே மாதம் 2013-இல் இதே முரளிக்கு, சுபாங்ஜெயா வாவாசான் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி என்பவரை மிரட்டியதற்காக குற்றவியல் சட்ட விதி 353-இன் கீழ் பூச்சோங் முரளிக்கு 18 மாத சிறை தண்டனையை மஜிஸ்திரேட் நீதிபதி புவான் சரிபா வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.