அம்னோவிடமிருந்து பாஸ் தலைவர்கள் ரிம 90 மில்லியனுக்கும் மேலான தொகையைப் பெற்றுக் கொண்டதற்கான ஆதாரத் தகவல்களைத் தான் பார்த்ததாக, அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர், ஹுஸாம் மூசா கூறினார்.
“நான் இதனை விளையாட்டாகச் சொல்லவில்லை, அத்தகவலின் ஆதாரத்தை நான் பார்த்தேன், அது துல்லியமாகவும் சரியானதாகவும் இருந்ததாலேயே பேசுகிறேன்.
“பாஸ் தலைமைக்கும் மற்றும் இதர சில்லறை பரிவர்த்தனைகளுக்காகவும், அஃப்பின் பேங்க் (Affin Bank) மூலம் செலுத்தப்பட்ட ஒரு பெரிய தொகை அது,” என்று ஹுஸாம் நேற்று நடந்த ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர், அம்னோவிடமிருந்து பாஸ் பணம் பெற்றதாக, இலண்டன் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளதை ஒட்டி கருத்துரைக்கையில் ஹுசாம் இதைச் சொன்னார்.
முன்னதாக, அஃப்பின் பேங்க் மூலம், பாஸ் அம்னோவிடமிருந்து பணத்தை வாங்கியதாக ஹூசாம் கூறியிருந்தார்.
“எனது உரையில் நான் தொகையைத் தெரிவிக்கவில்லை, காரணம் அத்தொகை ரிம 90 மில்லியனுக்கும் அதிகம்.
“ஆனால், வங்கியின் பெயர், அஃப்பின் பேங்க் என்று நான் உறுதியாகக் கூறுவேன்,” என்று கூறினார்.
“நான் எனது கூற்றில் உறுதியாக இருக்கிறேன். தொகையைத் தவிர, வேறு எதிலும் நான் முரண்படவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
பல மலேசியர்களும், பாஸ் உறுப்பினர்களும் ஆர்வமாக இருந்தபோதிலும், நாட்டின் நிதி அல்லது வங்கிச் சட்டத்திட்டங்களுக்கு தான் கட்டுப்படுவதால், ஆதாரங்களை வெளிப்படுத்த முடியவில்லை என அவர் கூறினார்.
அம்னோவிடமிருந்து பாஸ் ரிம 90 மில்லியன் பெற்றுள்ளது என்ற சரவாக் ரிப்போர்ட்டின் செய்திக்கு எதிராக, பாஸ் தலைவர் அப்துல் ஹடி ஆவாங், கிளேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
ஆனால், ஹுசாம் மீதும், அதே குற்றச்சாட்டை முன்வைத்த பாண்டன் எம்.பி. ரபிஸி ரம்லி மீதும் பாஸ் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அம்னோவிலிருந்து பணத்தைப் பெற்றவர்களில், நஷாருடின் மாட் இசாவும் ஒருவர் என ரபிஸி குற்றஞ்சாட்டியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக, உறுதியாகக் கூறிய அந்த முன்னாள் பாஸ் துணைத் தலைவரும், இதுவரை அதனைச் செய்யவில்லை.
கட்சியின் தலைமையை விமர்சித்ததற்காக, கடந்த மே 2016-ல், ஹுஸாம் பாஸ்சிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ஹாடி தாக்கல் செய்த வழக்குக்கு எதிரான தற்காப்பு அறிக்கையில், அம்னோவிடமிருந்து பெறப்பட்ட அந்தப் பணத்தில், பாஸ்-ஐச் சேர்ந்த வேறு யார் யார் இலாபமடைந்தனர் என்பதையும் கிளேர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரிம 90 மில்லியனை அம்னோ பாஸ்-சுக்குக் கொடுத்தது தொடர்பான தகவல் ஆதாரம், மனித உரிமைகள் ஆர்வலரும் வழக்குரைஞருமான அம்பிகா சீனிவாசனும் அறிவார் என கிளேர் குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்பில், தற்போது வழக்குரைஞர் அம்பிகா சீனிவாசன், குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
கடந்தாண்டு ஆகஸ்ட் 6-ல், ‘1எம்டிபி தொடர்பான அனைத்தையும் நஜிப் நிராகரிக்கிறார், ஆனால், அவரது மற்றபல குற்றவியல் தொடர்புகளை மறக்க வேண்டாம்’ (As Najib denies all over 1MBDB let’s not forget his many other criminal connections) என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில், பாரிசான் நேசனல் அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக, பாஸ்-சுக்குப் பணம் கொடுக்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இங்கிலாந்தில் நன்கு அறிமுகமான, கார்ட்டர்-ரக் சட்ட நிறுவனத்தின் வழி, அதி சேவை கட்டணம் செலுத்தி, கிளேர் மீது ஹாடி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
-தி மலேசியன் இன்சைட்
போதுமட சாமி!
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. காரணம் மலாய்/முஸ்லீம் இன வெறியர்கள் ஆட்சியையும் அதிகாரத்தையும் விட்டு கொடுக்கவே மாட்டாங்கள் – அதனால் எல்லா தில்லு முள்ளும் நடக்கும்– அதில் 90 மில்லியன் பெரிய பணம் ஒன்றும் கிடையாது–அதிலும் நம்பிக்கை நாயகன் கம்பி எண்ணும் சாத்தியம் இருக்கிறது. அதனால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எவனுக்கும் கிடைக்கும்.-ஆதரவு கொடுத்தால்.