நேற்று, சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராஹிம், சிலாங்கூர் அம்னோ மாநாட்டில் கலந்துகொண்டது ‘நிம்மதி’ அளிப்பதாக பாஸ் கூறியுள்ளது.
பாஸ் துணைத் தலைவர் இஸ்கண்டார் அப்துல் சமாட், பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட்டின் வருகை, இப்போது அவர் ஆளும் கட்சியின் பக்கம் இருக்கிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்று கூறினார்.
“அம்னோ மாநாட்டிற்கு காலிட் இப்ராகிம் வருகை தந்தது எனக்கு திருப்தியளிக்கிறது, முக்கியமாக இப்போது எந்தப் பக்கத்தில் (அம்னோ) அவர் உள்ளார் என்பது நமக்குத் தெரிந்துவிட்டது.
“முன்னதாக, காலிட் பாஸ்சில் சேருவார் என்று ஒரு வதந்தி இருந்தது, ஆனால் இன்று அவர் அம்னோவில் முனைப்பாக உள்ளார் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது,” என்று இஸ்கண்டார் மலேசியாகினியிடம் கூறினார்.
நேற்று, கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையத்தில் நடந்த சிலாங்கூர் அம்னோ மாநாட்டிற்குக் காலிட்டின் வருகை குறித்து, இஸ்கண்டார் இவ்வாறு கருத்துரைத்தார்.
மாநாட்டைத் தொடக்கி வைத்து, உரையாற்றவிருந்த அம்னோ துணைத் தலைவர் டாக்டர் ஷாஹிட்டுடன் காலிட் திடீரென்று மெர்டேக்கா மண்டபத்தில் தோன்றினார்.
அவர்களுடன், இன்னொரு முன்னாள் மந்திரி பெசார் முகமட் முகமட் தைப்பும் இருந்தார்.
காலிட் அல்லது மற்ற முன்னாள் மந்திரி பெசார்கள் யாரேனும் சிலாங்கூர் அம்னோ தேர்தல் இயந்திரத்தின் ஒரு பகுதியாகச் செயல்படுவதைக் கேள்வி கேட்க யாருக்கும் அவசியம் இல்லை என்று ஷாஹிட் தெரிவித்தார்.
இதற்கிடையே, எதிர்வரும் பொதுத் தேர்தலில், சிலாங்கூரில் அம்னோ மற்றும் பாஸ்சுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக காலிட் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, சிலாங்கூர் மக்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக பாஸ் மற்றும் அம்னோ உடனான தனது உறவைப் பராமரிக்க விரும்புவதாகவும் காலிட் தெரிவித்தார்.