தோட்டப்புறச் சமூகமாக இருந்து, இன்று நவீன சமூகமாக மாறிவரும் இந்தியர்களுக்கு, முன்னுரிமை வழங்கி வருவதாக பிரதமர் நஜிப் ரஷாக் தெரிவித்தார்.
இத்தகைய தனிப்பட்ட சவால்கள், குறிப்பாக இந்திய சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு உதவ, அரசாங்கத்தின் சிறப்பு கவனம் தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.
“இந்திய சமுதாயத்தில் சில தனிப்பட்ட சவால்கள் இருப்பதால் நான் அதில் கவனம் செலுத்துகிறேன். குறிப்பாக, இந்திய சமுதாய கட்டமைப்பு சவால் மிக்கது.
“தோட்டப் புறங்களில் இருந்து, நவீன சமூகமாக மாற்றம் பெற, புதிய தலைமுறையினருக்கு அதிக அளவில் உதவிகள் தேவைப்படுகிறது,” என்று இன்று, மக்கள் சக்தி 9-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் திறந்து வைத்து பேசியபோது நஜிப் கூறினார்.
இதனை அடைய, இந்திய சமூகத்திற்கு உதவ பாரிசான் நேஷனல் (பிஎன்) தலைவர் ஒரு சிறப்புத் திட்டத்தை முன்வைத்தார்.
“மலேசிய வரலாற்றில், நாடாளுமன்றத்தின் ஹான்சர்ட் பதிவில், இந்தியர்களுக்கான ஒரு சிறப்புத் திட்டம், இதுவரை பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டதில்லை,” என்று நஜிப் கூறினார்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம், இந்திய சமூக அபிவிருத்தி செயல் திட்டம் பிரதமரால் தொடங்கப்பட்டது. அடிப்படைத் தேவைகள், கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை உள்ளடக்கிய 10-ஆண்டு நடவடிக்கைத் திட்டத்தை உள்ளடங்கிய அது, பிரதமர் இலாகாவின் சிறப்பு பிரிவுகளால் செயல்படுத்தப்படும்.
எனவே, பிஎன்-க்கு ஆதரவு கொடுக்க வேண்டும், ஏனெனில் இந்தக் கூட்டணி மட்டுமே தனது வாக்குறுதியை நிறைவேற்றுகிறது என்று நஜிப் கூறினார்.
“நாம் வெற்று வாக்குறுதிகளை நம்பக்கூடாது. தமிழ் மொழியில் வெற்று வாக்குறுதி ‘வெட்டிப் பேச்சு’ என்று அழைக்கப்படுகிறது. ஆனால், உண்மை என்றால், ‘நிஜம்‘ என்று சொல்லப்படுகிறது.
“அரசாங்கம் என்ற முறையில், பி.என். தொடர்ந்து தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும்,” என்றார் நஜிப்.
பெரிய வெங்காயம் அள்ளிவிடுகிறது . தேர்தலின் போது தான் இப்படி பட்ட ப்பேச்சு.அதற்க்கு பிறகு கிரிசு பேசும். நம்மை இழிவாக பேசவா அவங்களிடம் ஆளில்லை ? தேர்தல் பேச்சை நம்பினால் 60 ஆண்டுகள் தொடரும்.
ஏன் இவர்கள் தொட்டப் புறங்களில்லை? அங்கு காலம் காலமாய் வாழ்ந்தவர்கள்; அப்போதெல்லாம் தோட்டங்கள் அந்நியர்களின் கையிலிருந்தது; என்றைக்கு இந்தத் தோட்டங்கள் உள்ளூர் முதலாளிமார்களுக்குக் கை மாறியதோ அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்த திட்டங்களென்றப் பேரில் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் விரட்டியடிக்கப் பட்டார்கள். இல்லையில்லை, கௌரமாக வெளியேற்றப் பட்டார்கள். நவீன சமூகமாக மாறி வருகின்றார்களென்பது உண்மைதான்; அதுவும் தங்களின் சொந்த முயற்சியில் உழைப்பில். சுதந்திரத் தந்தை துங்கு அவர்களின் மொழியில் சொன்னால் இந்த நாட்டிற்கு சுதந்திரமும் பெற்றுக் கொடுத்தவர்கள்; மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கமினூச பயங்கரவாதிகளை -இந்த நாட்டின் பாதுகாப்பிற்கும் பெரிய மிரட்டலாகவும் சவாலாகவும் விளங்கியவர்கள்- அவர்களை ஒழிப்பதற்கு தொட்டப் புற மக்கள் உயிரையும் பயணம் வைத்தவர்கள்; ரத்தமும் சிந்தியவர்கள்; ஆகவே இந்த நாட்டிற்கு இந்திய சமூகத்தின் பங்கு அளப்பரியது. அப்படிப் பட்ட சமூகம் இன்று கேட்பாரற்றுக் கிடக்கின்றது. இந்த அடிப்படை உண்மைகளும் வரலாறுகளும் கொஞ்சமும் தெரியாமல் நாட்டின் பல பொறுப்புள்ளத் தலைவர்கள் இன்னும் ஏதோதோ உளறிக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டில் எத்தனையோப் பிரதமர்கள் மாறிவிட்டார்கள்; இன்னமும் விடிவுக் காலங்களில்லை. ஆனால் இன்றைக்குத்தான் அதுவும் 60 ஆண்டுகள் கழித்து இப்போது தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்திய சமூகத்திற்கு உதவ சிறப்புக் கவனம் தேவைப் படுகின்றதென்றுச் சொல்வது வியப்பாகவுள்ளது!. இதற்க்கு மஇக வினரின் விளக்கமும் பதில்களுக்குள்தான் என்ன?
ஐயா பிரதமர் அவர்களே…
உண்மையிலேயே இந்தியர்கள் இன்னும் தோட்டங்களில் இல்லையா அல்லது யாராவது எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசிக்கிறீர்களா?
துணைப்பிரதமராக இருந்த காலத்திலும் சரி அதன் பின் பிரதமராக பதவியேற்றபின்னும் சரி எத்தனை தோட்டத்துக்கு சென்றிருக்கிறீர்கள்?
ஒவ்வொரு முறை அரசியல் தலைவர்களும் நாட்டுத் தலைவர்களும் மாறும்போது சொல்லத் தவறாத ஒரு வார்த்தை ‘நாட்டு வளங்கள் அனைத்து இனத்துக்கும் பகிர்ந்தளிக்கப்படும். எந்த இனமு புறக்கணிக்கப்படாது’ இது வெறும் வார்த்தை ஜாலம் மட்டும் தான். காரணம் நாட்டின் வளம் எந்த வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டது?
கடந்த 60 ஆண்டுகள் அல்ல…அதற்கு முன்பு ஜப்பானியர் ஆட்சியின் போதும். அதன் பின் வந்த பிரிட்டிஷார் ஆட்சியின் போதும் இந்த நாட்டுக்கு அயராது உழைத்தவர்கள் இந்தியர்கள். இந்த நாட்டு இன்றைய வளப்பத்துக்கும் முன்னேற்றத்துக்கும் இந்தியர்களின் பங்கு அளப்பரியது என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த ஜப்பானிய பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்திலும் இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். இன்றும் அவர்கள் உயர் கல்வி வாய்ப்பிலும், வேலை வாய்ப்பிலும் அலைக்கழிக்க ப்படுகிறார்கள். இந்திய இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் கூட வேலை கிடைப்பதில்லை என்பது தான் இன்றைய உண்மை நிலை.
இப்படி எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் வெற்று வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த இந்தியகளின் இன்றைய நிலை என்ன? அது உங்களுக்கே தெரியும். ஆனால் இதற்கு காரணம் என்ன? ஆட்சியாளர்களிடம் இந்தியர்களுக்கென்று ஒரு முறையான திட்டம் இருந்தது இல்லை. இன்று கூட அனைவருக்கும் இந்தியர்களின் வாக்குகள் தான் முக்கியமானதாகத் தெரிகின்றன. பொது தேர்தலுக்குப் பிறகு அனைத்தும் மறந்து போகும்’ பறந்து போகும். பிறகு அடுத்த தேர்தல் வரை இந்தியர்களின் நிலை ‘பழைய குருடி’ கதைதான்.
சரி…அதெல்லாம் பழைய கதை …இனி விஷயத்துக்கு வருவோம்.
‘இந்தியர்கள் இன்னும் தோட்டங்களில் இல்லை’ என்று நீங்கள் சொன்னதைக் கேட்டு எந்த இயக்கமும் ஆட்சேபம் தெரிவிக்க வில்லை. காரணம் நீங்கள் பிரதமர், உங்களை எதிர்த்து பேசுவது போல் ஆகிவிடக்கூடாது என்பது தான். அது அவர்களின் அச்சம் ரல்லது சுபாவம் என்று விட்டு விடலாம்.
ஆனால் இது நாள் வரையிலும் (இனியும்) இந்திய தோட்டப்பாட்டாளி மக்களின் பணத்தில் வயிறு வளர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தேசிய நிலநிதி கூட்டுறவு கழகமும், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் வாய் மூடி மௌனம் காப்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. காரணம் இன்னும் தோட்டப் புறங்களில் எத்தனை ஆயிரம் இந்தியர்கள் வாழகிறார்கள் வேலை செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்குமே? பிறகு ஏன் இந்த மௌனம்? இந்த கேள்விக்கு ‘சம்மந்தப்பட்டவர்கள்’ பதில் தந்தே ஆகவேண்டும். அல்லது இந்த இரு இயக்கங்களின் சார்பாக ‘விஷயம்’ தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம். ஆனால் ‘அரை வேக்காடுகள்’ பதில் சொல்லி வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம்.
நாம் இப்போது தான் நவீன சமுதாயமாக மாறி வருகிறோமா? அப்படி என்றால் மலாய்க்காரன் எப்போதோ நவீன சமுதாயமாக ஆகிவிட்டானா? 1980 க்கு முன் மருத்துவர்கள் தொழில் பண்பட்டவர்கள் பொறியாளர்கள் பலர் நம்மை சேர்ந்தவர்கள்– காக்காத்திமிர் நம்மை ஓரம் கட்ட ஆரம்பித்ததும் பலர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். 1969 –க்கு பின் குறிப்பாக 1981 –க்கு பின் மலாய்க்காரர்கள் எல்லா முக்கிய பதவிகளில் தரம் தகுதி இல்லாதிருந்தும் அமர்த்தப்பட்டனர்– இதே கதை தான் எல்லா இடங்களிலும். சீனர்கள் வியாபாரம் தெரிந்தவர்கள் அவர்கள் இதனை சட்டை செய்ய்ய வில்லை– நம்மவர்கள் மற்றவர்களுக்கு வேலை செய்தே பழக்கப்பட்டதினால் சொந்த வேலை செய்ய இயலாமையால் அதிகமாக பாதிக்கப்பட்டனர். நம்மை சாக்கடையில் தள்ளி விட்டு இப்போது பிரதமன் வேடம் போடுகிறான்-என்னமோ நமக்கு கலை கலாச்சாரம் இல்லாத சமூகம் போல் பேசுகிறான். அன்றைய காலங்களில் இவங்களுக்கு கல்வி அறிவு கொடுத்ததே சீனர்களும் நம்மவர்களும் தான். அன்றைக்கு என் பள்ளியில் மலாய் மொழிக்காக 2 மலாய் ஆசிரியர்கள் மட்டுமே — 2000 மாணவர்கள் இருந்த அந்த ஆங்கில பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் யாவரும் சீனர்களும் இந்தியர்களும். இதுதான் அன்றைய நிலை. பல்கலைக்கழகங்களின் நிலையும் அதுவே– அப்படி இருக்கையில் எப்படி நாம் இப்போதுதான் நவீன சமுதாயமாக மாறுகிறோம்?
இந்தியர்கள் இன்று தோட்டங்களில் பெரும் அளவில் இல்லாது போனாலும் இன்னும் சில மாநிலங்களில் தோட்டப்பகுதிகளில் கொத்தடிமைகளாகதான் வாழ்ந்து கொண்டு இருகின்றார்கள். தோட்ட துண்டாடல், அபிவிறுத்தி திட்டம் என மக்களை தோட்டத்தை விட்டு விரட்டும் போது முறையான நஸ்ட ஈடோ, வீட்டு வசதியோ வழங்கப் பட வில்லை. வெளியேறியவர்கள் புறம்போக்கு பகுதிகளிலும், இரயில் தண்டவாள நிலப் பகுதிகளிலும் குடியேறி வாழ்ந்து அதன் பிறகு பல போராட்டங்களுக்கு பின்னர் அடுக்கு மாடி வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர் சிலரின் கெட்டிக்கார தனத்தால் தரை வீடு , இரட்டை மாடி என வாங்கி குடியேறினார்கள்.நீங்கள் சொல்வதுபோல் பி.என். அரசு இந்தியர்களை குறிப்பக தோட்டப்புற மக்களை சொகுசாக எங்கும் கொண்டு போய் அமர்த்த வில்லை.வரலாறு தெரிந்து பேசுங்கள்.