இன்றிரவு, ஈப்போவில் நடைபெற்ற பெர்சத்துவின் ஜெலஜா செமாரக் செராமாவில் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் பங்கேற்கவில்லை.
மகாதிர் கலந்துகொள்ளாததற்காக பெர்சத்துவின் துணைத் தலைவர் முக்ரீஸ் மகாதிர் வருத்தம் தெரிவித்தார். கடந்த ஒரு வார காலமாக மகாதிர் உடல்நலமற்று இருப்பதாக அவர் கூறினார்.
அவர் ஒரு வாரத்துக்கு மேலாக இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றாரவர்.
இருந்தும், அவர் தொடர்ந்து காலை நேரத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். ஆனால், மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் இரவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாது என்று முக்ரீஸ் கூட்டத்தினரிடம் கூறினார்.
ஆனாலும், மகாதிரின் பதிவு செய்யப்பட்ட செய்தி ஒலிபரப்பப்பட்டது.
அம்னோவின் தோல்வி மலாய்க்காரர்களை நாசமடையச் செய்யும் என்று நஜிப் கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டிய முக்ரீஸ், மலாய் தலைவர்களால் வழிநடத்தப்படும் முக்கியமான அமைப்புகளான பெல்டா, மாரா, தாபுங் ஹாஜி வாரியம் ஆகியவை ஊழல்களில் சிக்கியுள்ளன என்றார்.
இந்த ஊழல்களில் எல்லாம் மிகப் பெரியது 1எம்டிபி…இதற்கு யார் பொறுப்பு என்று வினவிய முக்ரீஸ், 1எம்டிபி ஆலோசகர்கள் வாரியத்தின் ஆலோசகர் பெக்கான் அம்னோ தொகுதியின் தலைவரும் அம்னோவின் தலைவருமாவார் என்றாரவர்.
அம்னோவின் தோல்வி மலாய்க்காரர்களை நாசமாக்கும் என்று நாம் இன்னும் நம்பப்போகிறோமா என்று முக்ரீஸ் கேட்டார்.
இப்போது மலாய்க்காரர்களை நாசமாக்கிக் கொண்டிருப்பது தற்போதைய அம்னோவின் தலைமைத்துவம்தான் என்றாரவர்.
பக்கத்தான் ஹரப்பானை ஆதரிப்பதற்கு அஞ்சக்கூடாது என்று அங்கிருந்தவர்களை முக்கிரீஸ் கேட்டுக்கொண்டார்.
அந்தச் செராமாவில் பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் மற்றும் பேராக் பெர்சத்து தலைவர்கள் இருந்தனர்.