டிசம்பர் 3, 2017 – கெமிஞ்சே – நடைப்பயணத்தின் 9-ம் நாள், மதியம் 12 மணியளவில் கெமிஞ்சே வந்தடைந்தனர் தியாகு குழுவினர்.
மதியவெயில் காரணமாக தியாகுவும் அஞ்சாதமிழனும் சற்று சோர்ந்திருந்தனர். களைப்போடு வந்தவர்களைச் ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் இயக்கப் பொறுப்பாளர் தோழர் முனியாண்டி, அவர்தம் நண்பர்களோடு வரவேற்று உபசரித்தார். அவர்களுடன் செனாவாங் சட்டமன்ற உறுப்பினர் பி.குணாவும் இருந்தார்.
“இன்று காலை, சற்று தாமதமாக, 7 மணியளவில்தான் நடக்கத் தொடங்கினோம், வெயில் ஏறத்தொடங்கி, நடக்க சற்று சிரமமானது. ஆனால், இன்றைய இலக்கை சுமார் 12 மணியளவில் அடைந்துவிட்டோம்,” என்று தியாகு தெரிவித்தார்.
தியாகு குழுவினரைச் சந்திக்க, அங்கு வந்த கெடோக் இளைஞர்களுடன் சில மணி நேரங்களைத் தியாகு செலவிட்டதாக தோழர் முனியாண்டி நம்மிடம் தெரிவித்தார். மதிய உணவுக்குப் பின்னர், அவர்களின் கலந்துரையாடல் நீண்ட நேரம் நீடித்தது என்றார்.
இன்று நாம் தியாகுவை, கெமிஞ்சேயில் செம்பருத்தி செய்திகளுக்காகச் சந்தித்தோம்.
“தமிழ்மொழி என்பது வெறும் மொழியல்ல, அது எங்கள் தாய்க்கும் சமம்,” என்று தியாகு சொன்னார். மேலும், “தமிழ்ப்பள்ளி என்பது, வகுப்பறைகள் மட்டுமல்ல, அது தாயின் கருவரைக்குச் சமம்,” என்றும் அவர் நம்மிடம் சொன்னார்.
அச்சமயம், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன், தியாகுவைத் தொலைபேசியில் அழைத்து பேசினார்.
அவர்களின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ஜனநாயகச் செயற்கட்சி (ஜசெக) தமிழ்ப்பள்ளிகளில் இருமொழி திட்டம் அமல்படுத்தப்படுவதை எதிர்க்கின்றது என்று அவர் கூறியதாக, தியாகு நம்மிடம் சொன்னார்.
“தமிழ்ப்பள்ளிகளில் அறிவியலும் கணிதமும் தமிழ்மொழியிலேயேப் போதிக்கப்பட வேண்டும், தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி திட்டத்தை ஜசெக ஆதரிக்கவில்லை என்று குலசேகரன் சொன்னார்,” என்றார் தியாகு.
இதற்கிடையே, இருமொழி திட்டத்தால் தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிக இழப்புகளே வந்துசேரும் என்றார் செனாவாங் சட்டமன்ற உறுப்பினர் பி.குணா. உதாரணத்திற்கு, ஆசிரியர் பணி, தமிழ்ப்பள்ளிகளில் இந்திய ஆசிரியர்களை நாம் இழக்கக்கூடும் என்று அவர் நம்மிடம் தெரிவித்தார்.
“இன்று, மலேசிய அரசாங்கத்தில் இந்தியர்கள் அதிகமாக பணியாற்றும் ஒரே இடம் தமிழ்ப்பள்ளிகள்தான். அதுவும், இந்த டிஎல்பி திட்டத்தால் இல்லாமல் போய்விடும்போல் உள்ளது,” என்றார் குணா.
“எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள், தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்களாக உள்ளனர். நாளை டிஎல்பி திட்டம் அமலுக்கு வந்தால், ஆங்கிலத்தில் அறிவியல்-கணிதம் போதிக்க தமிழ் தெரிந்த இந்தியர்கள் தேவையில்லை, ஆங்கிலம் தெரிந்த எந்த இனத்தவரும் தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல்-கணிதம் போதிக்கலாம்,” என்று நெகிரி செம்பிலான் மாநில ஜசெக துணைத் தலைவருமான பி.குணா நம்மிடம் தெரிவித்தார்.
“தமிழ்ப்பள்ளிகளில் நியமிக்கப்படும் வேற்று இன ஆசிரியர்களை வேண்டாம் எனத் தடுக்கும் ஆற்றல் தலைமையாசிரியருக்கோ அல்லது மற்ற தலைவர்களுக்கோ இல்லை. ஆக, நாளடைவில் இது இந்தியர்களை ஆசிரியர் பணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவிடும்,” என்றும் அவர் சொன்னார்.
“அதுமட்டுமின்றி, முந்தைய பி.பி.எஸ்.எம்.ஐ. திட்டம் தோல்வியான ஒன்று என்று, 2012-ல் அப்போதையக் கல்வி அமைச்சர் முஹிடின் யாசின் கூறியுள்ளார். தோல்வியடைந்த ஒரு திட்டத்தை, இன்று ஏன் மீண்டும் பட்டைத் தீட்டி, தமிழ்ப்பள்ளிகளில் புகுத்த வேண்டும்?” என்று தியாகு கேள்வி எழுப்பினார்.
“ஆகவே, தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி தேவை இல்லை, தமிழ்ப்பள்ளியில் தமிழிழேயே அறிவியல்-கணிதம் போதிக்கப்பட வேண்டும்,” என்றார் அவர்.
இன்றிரவு தோழர் முனியாண்டி இல்லத்தில் தங்கி அவர்கள் ஓய்வெடுக்கவுள்ளனர். அதிகாலை 5 மணிக்கு, டாங்கி பட்டணம் நோக்கி அவர்களின் நடைப்பயணம் மீண்டும் தொடரும்.
நாளை நெகிரி செம்பிலான், டாங்கியில் சுற்றுவட்டாரத் தமிழ் உணர்வாளர்கள் அவர்களைச் சென்று காணலாம்.
மேல் விவரங்களுக்கு : – https://www.facebook.com/MotherTongueEducation/ முகநூல் பக்கம் செல்லவும்.
அவர்களைச் சந்திக்க விரும்பும் அன்பர்கள், 012 4341474 – தமிழ் இனியன் / 016 948 9218 – கௌதமன் என்ற எண்களில் அழைக்கலாம்.
-ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்
வாழ்த்துக்கள் – என் ஆதரவு என்றும்.
தமிழர் வரலாற்றில் பதியப்படும் நிகழ்வு.