தெங்கு அட்னான்: ஹம்சா சொன்னதைத் ‘திரித்துக் கூறிய’ ஊடகங்கள் இறைவனுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்

அம்னோ  பொதுப்பேரவைக்   கூட்டத்தில்   உள்நாட்டு   வாணிக,  பயனீட்டாளர்   விவகார   அமைச்சர்  ஹம்சா   சைனுடின்   பேசியதைத்  ‘திரித்துக்  கூறிய’  ஊடகங்கள்   இறைவனுக்குப்  பதில்  சொல்ல   வேண்டியிருக்கும்   என  அம்னோ  தலைமைச்  செயலாளர்   தெங்கு   அட்னான்   தெங்கு  மன்சூர்   கூறினார்.

இன்று  புத்ரா  ஜெயாவில்   பேசிய    தெங்கு   அட்னான்   செய்தியாளர்கள்  அவர்கள்    வெளியிடும்   செய்திகளுக்கு    அவர்களே  பொறுப்பேற்க   வேண்டும்    என்றார்.

“இதன்  பிறகு,  ஹம்சாவுக்கு   நேர்ந்ததுதான்   எனக்கும்   நடக்கும்   என   நினைக்கிறேன்.  ஹம்சா   விலைவாசியைக்  குறைக்க   அரசாங்கம்  மேற்கொண்டுவரும்   முயற்சிகள்  பற்றிக்  குறிப்பிடப்போக   ஊடகங்கள்   அதை  வேறு  விதமாக   திரித்துக்  கூறிவிட்டன.

“இந்த  உலகுக்கு   என்ன   ஆகப்  போகிறதோ,   தெரியவில்லை.  குறிப்பாக  உங்களைப்  போன்ற    செய்தியாளர்களுக்கு.  நீங்கள்   என்ன    செய்கிறீர்களோ   அதற்கு   நீங்களே   பொறுப்பு.

“எல்லாருமே  இறைவனைச்   சந்திப்பீர்கள்   என்பதை   நினைவில்   கொள்ளுங்கள். அப்போது   நீங்கள்  ஒரு  சிலரின்   வெற்றிக்காக   பொய்யுரைத்தீர்கள்,  அவதூறு   கூறினீர்கள்    என்று   குற்றஞ்சாட்டுவோம்”,  என  அட்னான்   கூறினார்.

அமைச்சர்   ஹம்சா,    அம்னோ   பேரவையில்   விலைவாசி   குறித்து  தாம்   அளித்த   விளக்கத்தைச்  சில     ஊடகங்கள்  வேறுவிதமாக   திரித்து   அரசாங்கம்   விலைவாசிக்கு   எதிராக   எதுவும்   செய்யவில்லை   என்றும்    அதை  “இறைவனின்   விருப்பம்”   என  விட்டு  விட்டதாகவும்     கூறியிருந்தது   குறித்து   வருத்தமடைவதாகத்    தெரிவித்திருந்தார். அதைக்  குறித்துதான்   தெங்கு   அட்னான்   கருத்துரைத்தார்.

 

இதனிடையே,  அம்னோ   பேராளர்களுக்கு   பிரதமரும்   அம்னோ    தலைவருமான   நஜிப்   அப்துல்   ரசாக்   டிஸ்ஸோட்  கடிகாரங்கள்   கொடுத்ததாகக்  கூறப்படுவது    குறித்து   வினவியதற்கு   தெங்கு   அட்னான்  பதிலளிக்க   மறுத்து   விட்டார்.

“போதும்,  போதும்….மலேசியாகினிக்கு  அபத்தமான   கேள்விகள்   கேட்பதே   வாடிக்கையாகி  விட்டது”,  என்றாரவர்.

அண்மையில்   முடிவடைந்த   அம்னோ   பொதுப்பேரவைக்  கூட்டத்துக்கு  வருகை   புரிந்த  5,793   பேராளர்களுக்கும்  நஜிப்பின்   உருவமும்  “சித்தியா  கவான்   பிஎம் நஜிப் (நட்புடன்   நஜிப்)”   என்ற  வாசகமும்   பொறிக்கப்பட்ட   டிஸ்ஸோட்   கடிகாரங்களும்   கொடுக்கப்பட்டதாக    சமூக   வலைத்தளங்களில்    கூறப்பட்டிருந்தது.