Milosuam என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் வலைப்பதிவர் யூசுப் அல்-சித்திக்கை விசாரணைக்காக மேலும் இரண்டு நாள்கள் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
தொடக்கத்தில் வழங்கப்பட்ட மூன்று நாள்கள் காலாவதியானதைத் தொடர்ந்து தடுப்புக்காவலை நீட்டிக்க அனுமதி கேட்டு போலீசார் மனுச் செய்து கொண்டதாக வழக்குரைஞர் ஜி.சிவமலர் கூறினார். மிலோசுவாம் எம்ஏசிசி-இன் சாட்சி வாக்குமூலம் கசிந்தது தொடர்பில் கடந்த வாரம் மலாக்காவில் அவரது வீட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
“இதற்கு ( தடுப்புகாவல் நீட்டிப்புக்கு) யூசுப்பின் உறவினர் வீட்டையும் தாத்தாவின் வீட்டையும் சோதனையிட போதுமான அவகாசம் இல்லை என்று போலீஸ் காரணம் கூறினார்கள்.
“அதனால் (தடுப்புக் காவல்) மேலும் இரண்டு நாள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது”, என சிவமலர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஆனால், யூசுப்புக்கு எதிரான விசாரணை தொடர்பில் அவ்விரண்டு வீடுகளையும் சோதனையிட வேண்டிய தேவை என்னவென்பதற்கு போலீசார் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்று அவர் சொன்னார்.
ஜோகூர் மந்திரி புசார் முகம்மட் காலிட் ஊழலில் ஈடுபட்டதாக எம்ஏசிசி-யிடம் ஒரு சாட்சி அளித்த வாக்குமூலத்தின் ஒரு பக்கத்தை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார் என்பது யூசுப்புக்கு எதிரான குற்றச்சாட்டு.