மந்திரி பெசாரை விசாரிக்க வேண்டும், ஜொகூர் மக்கள் விருப்பம்

இந்த ஆண்டு தொடக்கத்தில், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் லத்தீப் பாண்டி மீது, நில அபகரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது, மந்திரி பெசார் முகமட் கலீட் நோர்டின், எந்தவொரு பாதிப்பையும் எதிர்நோக்கவில்லை என்று தெரிகிறது.

ஆனால், கடந்த வாரம், மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) வழக்கு தொடர்பான ஆவணம் குறித்த தகவல் கசியவிடப்பட்டு, சட்டமன்றத்தில் அவர் இலஞ்சம் பெற்றது தொடர்பாக கேள்விகள் எழுந்த பின்னர், எல்லாம் மாறிபோனது.

கடந்த திங்களன்று, மாநிலச் சட்டமன்றத்தில் அக்குற்றச்சாட்டுக்களை காலிட் மறுத்தபோதும், ஜொகூர் மக்கள் அரசியல் தொடர்புகளைப் பொருட்படுத்தாமல், மந்திரி பெசார் மீது முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர்.

காலிட்டின் வலுவான ஆதரவாளரான நோர்ஷி அலி, 60, விசாரணைக்கு உதவும் வகையில், அவ்வழக்கு குறித்த ஆதரங்களை அதிகாரிகளிடம் வழங்க எதிர்க்கட்சியினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும், இதுதான் சிறந்த வழி,” என்று மூவாரைச் சேர்ந்த அவர் நேற்று தெரிவித்தார்.

ஜொகூருக்காக காலிட் பல காரியங்களைச் செய்திருப்பதாகவும், அந்தக் குற்றச்சாட்டுகள் மாநிலத்தின் நற்பெயரைப் பாதிக்காது என்றும் அந்த வியாபாரி கூறினார்.

இதற்கிடையில், நோர்ஷி அலியின் நண்பர், 53 வயதான முகமட் நோர் சுகிமான், ஒரு மந்திரி பெசாராக காலிட்டின் செயல்திறனில் திருப்தி இல்லை, வெளிப்படையான விசாரணையை விரும்புவதாகக் கூறினார்.

ஜொகூரில் வறுமை நிலை குறித்து காலிட் வெளியிட்ட ஓர் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லாததால், தனக்கு அவர்மீது நம்பிக்கை குறைந்தது என்றார்.

“ஜொகூரில் ஏழைகள் இல்லை என்று அவர் சொன்னார், அது உண்மை இல்லை, காலிட் அவரின் சொந்த கம்போங், செரோம்மிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும், அது என்னுடைய கம்போங் கூட,” என்றார் அவர்.