கேளாங் பாத்தா வாக்காளர்கள் பிஎன் பக்கம் திரும்பி விட்டனர்: அம்னோ திட்டவட்டம்

கேளாங்  பாத்தா    நாடாளுமன்றத்   தொகுதியில்    2013-இல்  எதிரணியை  ஆதரித்த    வாக்காளர்கள்   இப்போது  பிஎன்னுக்கு   ஆதரவாக    திரும்பியிருப்பதாக   அம்னோ   உறுதியாக    நம்புகிறது.

அத்தொகுதியின்      எம்பி  டிஏபியின்   லிம்  கிட்   சியாங்   தேர்தலின்போது  கொடுத்த   வாக்குறுதிகளை    நிறைவேற்றவில்லை    என்றும்       தொகுதி  மக்களைச்   சந்திக்கவும்   அவர்களின்   குறைகளைத்   தீர்க்கவும்       அரிதாகவே   வருகை   புரிகிறார்   என்றும்   வாக்காளர்கள்   கூறியதாக   கேளாங்  பாத்தா   அம்னோ    தலைவர்   முகம்மட்  கைரி   மாலிக்    தெரிவித்தார்.

கடந்த  பொதுத்   தேர்தலில்    கிட்  சியாங்  54,284   வாக்குகளைப்   பெற்று   அவரை   எதிர்த்துப்   போட்டியிட்ட    அப்போதைய  மந்திரி   புசார்    அப்துல்   கனி   ஒத்மானைத்    தோற்கடித்தார். கனிக்கு   39,522   வாக்குகள்  கிடைத்தன.

“தொகுதி  மக்கள்    அவர்கள்   சீனர்களோ   மலாய்க்காரர்களோ,  இந்தியர்களோ   அவர்களின்  பிரச்னைகளுக்குத்   தீர்வுகாண   பிஎன்   பிரதிநிதிகளைத்தான்  முதலில்   அணுகுகிறார்கள்.  அம்னோவைச்  சேர்ந்த    நாங்கள்   ஏன்  மசீச,  கெராக்கானும்கூட     அவர்களுக்கு    உதவ   தயக்கம்   காட்டுவதே  இல்லை”,  என   முகம்மட்  கைரி   கூறினார்.

அந்தத்  தொகுதியைத்   திரும்பக்  கைப்பற்ற   பிஎன்   2013-இலிருந்து கடுமையாக   பாடுபட்டு    வருவதாக    அவர்    பெர்னாமாவிடம்   தெரிவித்தார்.

தொகுதி  மக்களின்   ஆதரவையும்   நம்பிக்கையையும்   பெற   பிஎன்  பல்வேறு   திட்டங்களைச்   செயல்படுத்தியிருப்பதாக     அவர்   சொன்னார்.

-பெர்னாமா