அமெரிக்காவைச் சார்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் ஒருவர், அன்வார் இப்ராஹிம்மை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனும் தனது பிரச்சாரத்திற்குள், துன் டாக்டர் மகாதிர் முகமட்டை இணைக்க உள்ளார்.
கிம்பர்லி மோட்லியின் கூற்றுப்படி, அந்த முன்னாள் பிரதமருடனான நாளைய சந்திப்பில், முடிவு எடுக்கப்படும் என அவர் நம்புகிறார்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள, பிகேஆர் அலுவலகத்தில், அன்வாரை விடுதலை செய்யக்கோரும் தன்னோடு, டாக்டர் மகாதிரை இணைந்துகொள்ள அழைக்கவிருப்பதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
“அன்வாரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என, தன்னைப்போலவே ஒத்த கருத்தை அவர் கொண்டுள்ளார்.
“அதனால், நான் அவருடன் விவாதிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து சமீபத்தில் மலேசியா வந்த கிம்பர்லி, பிரதமர் நஜிப்பையும் உள்துறை அமைச்சர் டாக்டர் அஹ்மட் ஷாஹிட் ஹமிடியையும் சந்திப்பிற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எந்தவொரு நிபந்தனையும் இன்றி, அன்வார் விடுவிக்கப்பட வேண்டும் என அவர்கள் இருவரையும் கேட்டுக்கொள்ள உள்ளதாக கிம்பர்லி தெரிவித்தார்.
“அவர்களுடன் அமர்ந்து, அன்வாரின் உடல்நிலை, அவர் குடும்பத்தின் கவலைகள் மற்றும் நியாயமற்ற சிறைவாசம் பற்றி பேச விரும்புகிறேன்,” என்றார் அவர்.
ஆனால், அவர்கள் இருவரிடமிருந்தும் இன்னும் எந்தவொரு பதிலும் வரவில்லை எனவும் கிம்பர்லி தெரிவித்தார்.