பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசியல் செயலாளராகத் தாம் நியமிக்கப்பட்டுள்ளதை முன்னாள் கோத்தா மலாக்கா எம்பி வோங் நய் சீ உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் அந்தத் தகவலை சின் சியூ நாளேட்டிடம் தெரிவித்தார். தமது நியமனம் டிசம்பர் மாதம் தொடக்கம் அமலுக்கு வருவதாகவும் மசீச இளைஞர் மத்தியக் குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.
தமக்கு அந்த நியமனம் புதிய சவால் என்றும் அதனை ஏற்றுக் கொள்வதின் மூலம் நாட்டுக்குச் சேவை செய்யப் போவதாகவும் வோங் கூறினார்.
நல்லதை மட்டும் தாம் பிரதமரிடம் தெரிவிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்ட எதனையும் மறைக்காமல் சீன சமூகத்தின் கவலைகளைத் எடுத்துரைக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“நாம் சமூகத்திற்கு நியாயம் செய்யும் கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும். நான் பிரதமருக்கு தவறான செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தால் நான் பிரதமருக்கு ஏமாற்றத்தை தந்தவனாகி விடுவேன்.”
என்றாலும் பிரதமருடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதின் வழியும் பங்காற்ற முடியும் என்றும் அவர் சொன்னார்.
வோங்-கின் அரசியல் பின்னணி காரணமாக மசீச அவரை அரசியல் நோக்கங்களுக்காக அங்கு அமர்த்தியுள்ளது என்னும் தோற்றத்தை தருமா என அவரிடம் வினவப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த வோங், அந்தத் தோற்றத்தை தவிர்க்க முடியாது என்றார். என்றாலும் நாட்டுக்குச் சேவை செய்வதே தமது பொறுப்பு என அவர் வலியுறுத்தினார்.
மசீச தமக்குச் சிறப்புப் பணி எதனையும் தரவில்லை எனத் தெரிவித்த அவர், தமது கடமைகள் பிரதமரைப் பொறுத்தது என்றார்.
2004ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மசீச-வில் சிறிது காலத்திற்கு இணைந்திருந்த அந்த 42 வயது வழக்குரைஞர் அப்போதைய டிஏபி தலைமைச் செயலாளர் கெர்க் கிம் ஹாக்-கை அந்தத் தேர்தலில் தோற்கடித்தார்.
2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் டிஏபி-யின் சிம் தொங் ஹிம்-மிடம் தோல்வி காணும் வரையில் அவர் மசீச-வில் வளரும் நட்சத்திரமாகக் கருதப்பட்டார். 2010ம் ஆண்டு அந்தக் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து மசீச மத்தியக் குழு உறுப்பினர் பதவியை அவர் துறந்தார்.