பெட்ரோல் நிலைய கொலை தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை: போலீஸ் விளக்கம்

நேற்று  ஜோகூர்    தாமான்   பெலாங்கியில்  பெட்ரோல்   நிலையம்  ஒன்றில்   ஓர்   ஆடவரைக்   கொலை   செய்ததாக   சந்தேகிக்கப்படும்   நபர்களை  போலீஸ்   கைது   செய்திருப்பதாகக்  கூறும்   தப்பான   தகவல்களைப்  பரப்புவதைப்  பொதுமக்கள்   நிறுத்த   வேண்டும்.

சமூக  வலைத்தளங்களில்  பரவிவரும்   அத்தகவல்    உண்மையல்ல    என்று    ஜோகூர்    குற்றப்புலனாய்வுத்  துறைத்    தலைவர்   அஸ்மான்   ஆயுப்    கூறினார்.

“இன்னமும்   விசாரணை   நடந்து   கொண்டுதான்   இருக்கிறது.  யாரும்  கைது   செய்யப்படவில்லை. அதில்  ஏதேனும்   முன்னேற்றம்   காணப்பட்டால்   தெரிவிப்போம்”,  என   அவர்  இன்று  ஓர்   அறிக்கையில்    கூறினார்.

தாமான்  பெலாங்கி  கொலை   தொடர்பில்   போலீஸ்   சிலரைக்  கைது    செய்திருப்பதாகக்  கூறியதுடன்   அவர்களின்   உருவப்படங்களும்   முகநூல்,  வாட்ஸ்அப்  போன்றவற்றில்   பதிவேற்றம்    செய்யப்பட்டு   வருகின்றன.

நேற்றிரவு    ஒரு  பெட்ரோல்   நிலையத்தில்  நிகழ்ந்த   அச்சம்பவத்தில்   30-வயது   ஆடவர்   ஒருவரை   நால்வர்   அடங்கிய   ஒரு   கும்பல்    கத்தியால்  குத்தியதுடன்     அவர்மீது     காரையும்   ஏற்றிக்  கொடூரமாகக்   கொன்றது.