எம்பி: ஹாடியின் பாட்டை அப்படியே ஒப்புவிக்கிறார் லியோ

லிம்  கிட்  சியாங்   பிரதமரானால்    நாட்டின்  “இன  நல்லிணம்   கெடும்”  என்று   கூறிய   மசீச   தலைவர்    லியோ  தியோங்  லாயை    டிஏபி   தேசிய   விளம்பரப்  பிரிவுச்   செயலாளர்    டோனி  புவா    சாடினார்.

அதற்கு  முந்திய  நாள்   பாஸ்   தலைவர்    அப்துல்  ஹாடி    ஆவாங்   மலேசியாவை   வழிநடத்துபவர்    ஒரு  முஸ்லிமாகத்தான்  இருக்க    வேண்டும்    என்பதால்     டிஏபி  பிரதமர்    பதவிக்கு    ஆசைப்படக்கூடாது    என்று   கூறி  இருந்ததை    அடுத்து   லியோவின்    அறிக்கை    வந்துள்ளது.

ஹாடிதான்   14வது   பொதுத்   தேர்தலில்     “தோற்றுப்போகும்  பயத்தில்”   மலாய்   வாக்காளர்களின்   ஆதரவுக்காக    அப்படிப்   பேசுகிறார்   என்றால்    லியோவுக்கும்   அதே  பயம்    வந்துவிட்டதா   என்று    புவா   வினவினார்.

“இதில்   வியப்பதற்கு   எதுவுமில்லைதான்.

“மலாய்க்காரர்- அல்லாதாரிடம்   இனி   தமக்கு    ஆதரவில்லை    என்பதை   மசீச    தலைவர்   உணர்ந்து  விட்டார்  போலும்”, என   புவா  ஓர்    அறிக்கையில்   கூறினார்.

“இப்போது   அம்னோ,  பாஸ்   அடிபணிந்து   மலாய்க்காரர்களின்   கூடுதல்  ஆதரவைப்  பெற    விரும்புகிறார்போலும்.

“இது   மசீச  தன்வசமுள்ள   ஒரு   சில   இடங்களை,   அவர் (லியோ)   379-  வாக்குப்  பெரும்பான்மையில்   வென்றாரே   பெந்தோங்  போன்ற  இடங்கள்   அப்படிப்பட்ட   இடங்களைத்    தக்க  வைத்துக்கொள்ள  உதவலாம்”, என்றார்.

மசீச   எந்தக்  கொள்கைகளின்   அடிப்படையில்    உருவாக்கப்பட்டதோ   அவற்றைவிட்டு  விலகி   வந்து   விட்டதாக  புவா   குற்றஞ்சாட்டினார்.

 

“சீனர்   நலன்காக்க   உருவாக்கப்பட்ட    ஒரு   கட்சி,   அம்னோவிலும்   பாஸிலும்  உள்ள   தீவிரவாதிகளின்    இனவாத  பொய்களையும்   பரப்புரைகளையும்   அப்படியே   ஒப்புவிக்கும்   கிளிப்பிள்ளையாக   மாறியிருப்பது   மிகப்  பெரிய  முரண்நகை”,  என  புவா   கூறினார்.

இதனிடையே,  கிட்   சியாங்கும்   லியோவைச்  சாடியுள்ளார்.     தமக்குப்  பிரதமராகும்   ஆசையெல்லாம்   கிடையாது     என்றாரவர்.

“நான்  பிரதமராக   விரும்புவதாக   அம்னோ,  பாஸ்    தலைவர்கள்   கூறும்  அடுக்காத    பொய்களை  அவர்    அப்படியே    எடுத்துரைப்பதைப்   பார்க்கும்போது    லியோ   இந்த   அளவுக்குத்    தரம்   தாழ்ந்து  போய்விட்டாரே   என்று      பரிதாபமாக   இருக்கிறது.

“என்  52   ஆண்டுக்கால    அரசியல்    வாழ்க்கையில்    நான்   ஏற்கனவே    சொல்லியதை  மீண்டும்  சொல்ல  வேண்டிய   அவசியம்  இல்லை   என்று  நினைக்கிறேன்-  பிரதமராகும்   எண்ணம்   என்றும்   எனக்கு    இருந்ததில்லை ”,  என  லிம்  ஓர்   அறிக்கையில்  கூறினார்.