பக்கத்தான் ஹரப்பான் அதன் பிரதமர் வேட்பாளரின் பெயரை அடுத்த மாதம் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.
அறிவிக்கப்படவிருக்கும் வேட்பாளர் பிரதமர் பதவிக்கு கூட்டணியின் பெரும்பான்மைத் தேர்வான அன்வார் இப்ராகிமுக்கு பதிலாக அமர்த்தப்படுவார், ஏனென்றால் அன்வார் இன்னும் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் பதவிக்கு நமது தேர்வு அன்வார்தான். ஆனால் அவர் சிறையில் இருக்கிறார். ஆகவே, அது நடப்பது சாத்தியமில்லை.
அதனால் நமக்கு வேறொரு வேட்பாளர் இருந்தாக வேண்டும். ஒருவர் தேர்வு செய்யப்படுவார். நாம் அதை அடுத்த மாதம் அறிவிக்க முடியும் என்று நம்புகிறோம் என்று குவான் எங் கூறியதாக சினார் ஹரியான் கூறுகிறது.
இம்மாதத் தொடக்கத்தில் வெளியான செய்தியின்படி ஹரப்பானின் தலைவர் மகாதிர், தற்காலிக அடிப்படையில், பிரதமராகவும் பிகேஆர் தலைவர் வான் அசிஸா வான் இஸ்மாயில் துணைப் பிரதமராகவும் இருக்க ஆலேசனை தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால், மகாதிரும் பிகேஆரும் அந்த முன்மொழிதல் இறுதியானதல்ல என்று வலியுறுத்தினர்.
சிறையிலிருக்கும் அன்வார் அடுத்த ஆண்டு விடுவிக்கப்படுவார். ஆனால் அவர் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் தகுதியற்றவராகவே இருப்பார்.