லிம் கிட் சியாங்: என்எப்சி சர்ச்சை மீது இன்னும் அதிகமான பதில்கள் தேவை

மலேசியர்கள், 300 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட சர்ச்சையில் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் சொல்வதை மட்டும் கேட்க விரும்பவில்லை. மாறாக அதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அரசாங்கமும் என்ன சொல்கின்றனர் என்பதையும் அறிய விரும்புகின்றனர்.

மூன்று வாரத்திற்கு மேல் மௌனமாக இருந்த பின்னர் என்எப்சி நிர்வாகத் தலைவர் முகமட் சாலே இஸ்மாயில் அந்தச் சர்ச்சை மீது அண்மையில் விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து என்எப்சி எழுப்பப்பட்ட ஒவ்வொரு பிரச்னைக்கும் விளக்கம் அளித்திருப்பதால் அதனை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை மக்களிடம் விட்டுவதாக துணைப் பிரதமர் முஹடின் யாசின் கூறினார்.

அது பற்றிக் கருத்துரைத்த டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங், 2006ம் ஆண்டு என்எப்சி திட்டம் அங்கீகரிக்கப்பட்ட போது முஹைடின் விவசாய அமைச்சராக இருந்ததை சுட்டிக் காட்டினார்.

“அந்த என்எப்சி திட்டத்தை முஹைடின் அங்கீகரித்த போது அதற்கு இரண்டு விழுக்காடு வட்டியில் கொடுக்கப்பட்ட 250 மில்லியன் ரிங்கிட் கடனை ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை வாங்குவதற்கு பயன்படுத்துவது சட்ட ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் நன்னெறி ரீதியாகவும் சரியானது என முஹைடின் சொல்வாரா?”

“முஹைடின் அரசாங்கத்துக்கு ‘உண்மை தெரியும்’ எனக் கூறிக் கொள்வதால் ஒவ்வொரு அமைச்சரும் பதில் அளிப்பதற்குக் கேள்வி இருக்கிறது.”

“மாட்டிறைச்சித் தேவையில் தன்னிறைவு பெறும் பொருட்டு கால் நடை உற்பத்தியைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்ட எளிய கடனைப் பயன்படுத்தி இரண்டு ஆடம்பர அடுக்குமாடி வீடுகளை வாங்கப் பயன்படுத்தப்பட்டது பொருத்தாமானதா என்று அவர்கள் எண்ணுகின்றனரா?, அது நம்பிக்கை மோசடி இல்லையா?,  பொது நிதிகளையும் அதிகாரங்களையும் அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்தியது இல்லையா?”

குற்றவாளிக் கூண்டில் நிற்பது என்எப்சி நிர்வாகத் தலைவர் சாலே-யும் அவரது மனைவியும் அமைச்சருமான மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் அமைச்சரவையும் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது என லிம் மேலும் கூறினார்.

2011ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் மார்ச் மாதம் வரைக்கும் அந்த என்எப்சி திட்டத்தை தணிக்கை செய்த தலைமைக் கணக்காய்வாளருக்கு அந்த “கால்நடை ஆடம்பர அடுக்கு மாடி ஊழல்” பற்றித் தெரியாது என்பது தெளிவாகத் தெரிவதாகவும் அந்த ஈப்போ தீமோர் எம்பி கூறினார்.

அவருக்கு அது தெரிந்திருந்தால் அந்தத் திட்டம் 2010ம் ஆண்டுக்குக் குறிக்கப்பட்ட 8,000 கால்நடைகள் உற்பத்தி இலக்கை அடையாமல், அந்த இலக்கில் 41.1 விழுக்காட்டை மட்டுமே அடைந்துள்ளதால் ‘குழம்பிப் போயுள்ளது’ எனக் கூறியதைக் காட்டிலும் கடுமையாக கண்டித்திருக்கக் கூடும்.

“என்எப்சி-யிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என சாலே கூறியிருப்பதால் என்எப்சி விவகாரம் மீது புதன் கிழமை கூடும் நாடாளுமன்ற கணக்குக் குழுவுக்கு முன்பு தாமாகவே ஆஜராகி, அந்த நிறுவனம் குறித்த கேள்விகள் அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்,” என லிம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: