நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் 14வது பொதுத் தேர்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் செய்திகளைப் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் (இசி) கேட்டுக்கொண்டுள்ளது.
பிரதமரின் ஆலோசனையின்பேரில் மாமன்னரின் இணக்கத்துடன் மட்டுமே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என இசி தலைவர் முகம்மட் ஹஷிம் அப்துல்லா தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி பொருளற்றது என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
அச்செய்தி 2018, ஜனவரி 11-இல் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் மார்ச் 11 வேட்பாளர் தினம் என்றும் மார்ச் 25 வாக்களிப்பு நாள் என்றும் கூறுகிறது.
அது சரியல்ல என்று கூறிய முகம்மட் ஹஷிம், ஜனவரி 11-இல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மார்ச் 25-இல் வாக்களிப்பு நடந்தால் அது 60 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற வரம்பை மீறிவிடும் என்றார்.
“கூட்டரசு அரசமைப்பு பகுதி 55(4) 60 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிறது”, என்றாரவர்.