இராகவன் கருப்பையா – தற்போதைய அதி நவீன யுகத்தில் பேருந்தில் பயணம் செய்வதற்கு பணம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ‘டச் எண்ட் கோ'(Touch N Go) போன்ற திறனட்டை கையில் இருந்தாலே போதும்.
பேருந்தில் ஏறியவுடன் அதன் ஓட்டுனரின் அருகில் இருக்கும் தானியங்கி கருவியின் மீது இந்த பற்று அட்டையை வைத்து சம்பந்தப்பட்ட விசையை அழுத்தினால் போதும். நமது கணக்கிலிருந்து அப்பேருந்து நிறுவனத்தின் பொருளகக் கணக்கிற்கு இயங்கலை வழியாக வேண்டியத் தொகை பரிமாற்றம் ஆகிவிடும்.
ஆனால் சுமார் 30 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இத்தகைய நவீனத் தொழில்நுட்பம் இல்லாத வேளையில் ஒவ்வொரு பேருந்திலும் ‘பஸ் கொண்டக்டர்’ எனும் ஒருவர் ஆற்றியப் பங்கினை அவ்வளவு சுலபத்தில் நாம் மறந்துவிட முடியாது.
பேருந்தில் ஏறும் ஒவ்வொரு பயணியிடமும் பயணத்திற்கான பணத்தை வசூல் செய்து அதற்கான ‘டிக்கெட்’டை அவர் கொடுக்கும் விதம் உண்மையிலேயே நம்மை பிரமிக்க வைக்கும்.
நாடு தழுவிய நிலையில் கிட்டதட்ட எல்லா நகரங்களிலும் தற்போது சாலைகள் மேம்படுத்தப்பட்டு அகலமாகவும் நெடுஞ்சாலைகளாகவும் உள்ளன.
ஆனால் கடந்த 1990ஆம் ஆண்டுகளுக்கு முன் வளைந்து நெளிந்து இருந்த குறுகளானச் சாலைகளில் பேருந்து விரைந்து செல்லும் வேளைகளில் அந்தக் ‘கொண்டக்டர்’ தனது கடமையை ஆற்றும் விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்.
கையில் ‘டிக்கெட்’டுகளையும் பணப் பையையும் இறுகப் பிடித்துக் கொண்டு கைத் தாங்களுக்கு எதனையுமே பிடிக்காமல் லாவகமாக அந்த நீண்ட வாகனத்திற்குள் மேலும் கீழுமாக சுறுசுறுப்பாக அவர் நடந்துச் சென்று பணியாற்றியது அதிசயிக்கும் ஒரு செயல் என்றால் அது மிகையில்லை.
ஒவ்வொரு பேருந்து நில்லிடத்திலும் பயணிகள் எல்லாரும் பாதுகாப்பாக பேருந்தில் ஏறியவுடன் ‘ஜாலான்…..’ என்று உரக்கக் கத்துவது அந்தக் ‘கொண்டக்டரின்’ கடமையாகும். அதன் பிறகுதான் பேருந்து ஓட்டுனர் தனது வாகனத்தை அங்கிருந்து நகர்த்துவார்.
பேருந்தின் உள்ளே பயணிகளின் நெரிசல் எவ்வளவுதான் அதிகமாக இருந்தாலும் அதீத ஆற்றலுடைய அந்தக் ‘கொண்டக்டர்’ சம்பந்தப்பட்ட புதிய பயணிகளை தேடிச் சென்று அடையாளம் கண்டுவிடுவார்.
ஒரு சில வேலைகளில் ‘டிக்கெட், டிக்கெட், டிக்கெட்,’ என்று குரல் கொடுத்தவாறே அப்புதிய பயணிகளை அவர் அணுகுவார்.
மரக் கட்டையினால் செய்யப்பட்டுள்ள சுமார் ஒரு அடி நீளமுள்ள விசேஷ பிடிப்பச்சட்டத்தில் ‘டிக்கெட்’டுகள் அவற்றின் மதிப்புக்கு ஏற்ப தனித்தனியாக செருகியிருக்கும்.
அந்த பிடிப்பச்சட்டத்தை உறுதியாகப் பிடித்திருக்கும் அவருடைய
அதே கையில்தான் துணியினால் செய்யப்பட்டுள்ள பணப்யை ஒன்றும் தொங்கும். அதனுள் 5 காசு, 10 காசு, 20 காசு மற்றும் 50 காசு, ஆகிய நாணயங்கள் தனித்தனியாக இருக்கும்.
நோட்டுகளை அவற்றின் மதிப்புக்கு ஏற்ப தனித்தனியாக கிடைமட்ட வடிவில் மடித்துத் தனது கை விரல்களுக்கு இடையே பூ போல அவர் செருகி வைத்திருப்பது பார்ப்பதற்கு விசேஷமாக இருக்கும். சில வேளைகளில் தனது காதுகளின் மேற்பகுதியில் கூட ஒரு சில நோட்டுகளை அவர் செருகி வைத்திருப்பார்.
செல்ல வேண்டிய இலக்கை அவரிடம் நாம் சொன்னவுடன் அதற்கானத் தொகையை நம்மிடம் அவர் குறிப்பிட்டு, சரியான ‘டிக்கெட்’டை உருவி, தன்னிடம் கைவசம் இருக்கும் ஒரு சிறியக் கருவியைக் கொண்டு, அந்த ‘டிக்கெட்’டில் நேரம், தேதி, மாதம், முதலியவற்றைக் குறிக்கும் இடங்களில் ‘டிக், டிக், டிக்,’ எனத் துளையிடுவார்.
நம்மிடம் ‘டிக்கெட்’டைக் கொடுத்துவிட்டு அதற்கானத் தொகையையும் பெற்றுக் கொண்டு அடுத்தப் பயணியிடம் அவர் செல்வார். இவை அனைத்தையும் அந்தக் ‘கொண்டக்டர்’ மின்னல் வேகத்தில் செய்து முடிப்பதுதான் நம்மை அதிசயிக்க வைக்கும்.
சில வேளைகளில் மாற்றிக் கொடுப்பதற்கு சில்லறை நோட்டுகள் போதவில்லையென்றால் பிறகு கொடுப்பதாகக் கூறிவிட்டுச் செல்வார். சம்பந்தப்பட்டப் பயணி அவருடைய இலக்கை அடைவதற்குள் அவரைத் தேடிச் சென்று கொடுக்க வேண்டிய பணத்தைத் தவறாமல் கொடுத்துவிடுவார்.
யாராவது வேண்டுமென்றே குறைவானப் பணத்தைக் கொடுத்துவிட்டு நீண்ட தூரம் பயணித்து ஏமாற்ற நினைத்தாலும் அவர் கண்டுபிடித்துவிடுவார். அப்படிப்பட்ட நினைவாற்றலை அந்தக் ‘கொண்டக்டர்’ பெற்றிருப்பார்.
இதற்கிடையே அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறும் பயணிகளின் சேட்டைகளையும் அவர் மிகத் திறமையாகச் சமாளித்துத் தனது பணியை நிறைவேற்றுவார்.
அத்தகையப் பயணிகளினால் எம்மாதிரியான பிரச்சனைகள் எழும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருந்த போதிலும் அவர்களும் கூட உரிய இலக்கை பாதுகாப்பாக சென்றடைய அந்தக் ‘கொண்டக்டர்’ வகை செய்வார்.
‘கடந்த காலத்தில் ஒரு பேருந்திற்குள் இவ்வளவு விஷயங்களா?’ எனும் விவரம் தற்போதைய இளம் தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.