இராகவன் கருப்பையா – அண்மைய காலமாக நம் நாட்டில் நிகழ்ந்து வரும் பல சம்பவங்கள் சர்வதேச நிலையில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி, ஒட்டு மொத்த மலேசியர்களும் தொடர்ந்தாற்போல் தலைகுனிவுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஊழல், பொய் பித்தலாட்டம், போலி ஆவணம், பொருட்படுத்தாத அணுகுமுறை, கவனக்குறைவு, என அதற்கானக் காரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
முன்னாள் பிரதமர் நஜிப் புரிந்த ஊழல் குற்றங்கள் அவருக்கு மட்டுமின்றி அனைத்துலக ரீதியில் நாட்டிற்கும் எந்த அளவுக்குக் களங்கத்தை ஏற்படுத்தியது என்பது உலகறியும்.
‘உலக மகாத் திருடன்’ என அனைத்துலக நிலையில் பெயர் வாங்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், இன்னமும் கூட சட்ட சிக்கலில் மாட்டி நீதிமன்ற வாசல்களில் ஏறி இறங்குகிறார்.
அமெரிக்கா உள்பட சர்வதேச ரீதியில் உள்ள எண்ணற்ற ஊடகங்கள் அவரை மிகக் கேவலமாக விமர்சனம் செய்து செய்திகள் வெளியிட்டதை நாம் இன்னும் மறக்கவில்லை.
இந்நிலையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குள் இரு வளாகங்களுக்கு இடையிலான ரயில் சேவை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்தாற்போல் தடைபட்ட வண்ணமாக உள்ளது.
கிளேங் பள்ளத்தாக்கில் எல்.ஆர்.டி., மோனோரெய்ல், புத்ரா, ஈ.ஆர்.எல்., எம்.ஆர்.டி., என பல இலகு ரயில் சேவைகள் அன்றாடம் ஆயிரக் கணக்கான கிலோமீட்டர்களைக் கடந்து சேவையாற்றுக்கின்றன.
ஆனால் வெறும் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கான சேவைகளை வழங்கும் ‘ஏரோட்ரெய்ன்’ எனப்படும் அந்த விமான நிலைய ரயில் வண்டிகள் அடிக்கடி பழுதடைந்து, பயணிகளுக்கு பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது.
தினமும் இலட்சக் கணக்கான வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வருகை புரிய பிரதான நூழைவாயிலாக இருக்கும் அந்த அனைத்துலக விமான நிலையத்தில் இச்சூழல் நமக்கு ஒரு தலைகுனிவுதான் என்பதில் ஐயமில்லை.
போக்குவரத்து அமைச்சர் எந்தனி லோக் பல தடவை சாக்கு போக்குக் கூறிய போதிலும், அத்தனைக் காரணங்களும் ஏற்புடையதாக இல்லை. அமைச்சின் இயலாமையை இது மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
ஆகக் கடைசியாக, மலேசிய காற்பந்துச் சங்கத்தின் பொய் பித்தலாட்டச் செயல் அம்பலமாகி, உலகின் பல நாடுகளில் நம் நாட்டின் நற்பெயர் அனாவசியமாகக் கேவலப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
ஏழு அயல்நாட்டு காற்பந்து விளையாட்டாளர்களுக்கு போலி ஆவணங்களை தயார் செய்து, அவர்களுடைய முன்னோர்கள் மலேசியாவில் பிறந்தனர் என நிரூபிக்க முற்பட்ட அச்சங்கத்தின் தரக்குறைவானச் செயல் அம்பலமாகி கேலிக் கூத்தாகியுள்ளது எல்லாருக்கும் தெரியும்.
உள்துறையமைச்சர் சைஃபுடின் நசுத்தியோனும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார் என்பது அதைவிட பெருத்த அவமானமாகும்.
ஏனெனில் அந்த எழுவருக்கும் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் முறையாக, சட்ட ரீதியாகத்தான் வழங்கப்பட்டன என அறிவித்து, இந்த பொய் பித்தலாட்ட சிக்கலில் அவரும் மாட்டிக் கொண்டார்.
உள்நாட்டில் காலங்காலமாக அடையாள அட்டைகளுக்காக காத்துக் கிடக்கும் எண்ணற்ற முதியோர்கள் மலாய் மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என அலைக்கழிக்கப்படுகின்றனர்.
அண்மையில் அமைச்சர் கூட இத்தேர்வில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தக் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டிருந்ததைக் கண்டோம்.
ஆனால் மலாய் மொழியில் ஒரு வார்த்தைக் கூட பேசத் தெரியாத அந்த ஏழு பேர்களுக்கும் எடுத்த மாத்திரத்திலேயே அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட போலித்தனத்தை ‘ஃபிஃபா’ எனப்படும் அனைத்துலக காற்பந்துச் சம்மேளனம் கண்டுபிடித்து அம்பலமாக்கியுள்ளது.
“போலி பத்திரங்களை தயார் செய்வதற்கு அமைச்சர் கூட உடந்தையாக உள்ளாரா,” என வட ஆஃப்ரிக்காவில் உள்ள மொரோக்கோ போன்ற காற்பந்துக்கு புகழ்பெற்ற நாடுகளில் கூட எள்ளி நகையாடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது நம் அனைவருக்கும் வேதனைதான்.சம்பந்தப்பட்டவர்கள் முறையாக தண்டிக்கப்படாதது மட்டுமின்றி, மலேசிய காற்பந்து சங்கம் தனது குற்றத்தை நியாயப்படுத்த முற்படுவது ‘ஃபிஃபா’ அதிகாரிகளுக்கு மேலும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
நமது இளம் பூப்பந்தாட்ட வீராங்கனைகளான தீனா முரளிதரனும் பெர்லி தானும் கடுமையாகப் போராடி பெண்கள் இரட்டையர் பிரிவில் உலகின் 2ஆம் நிலைக்கு உயர்ந்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள வேளையில், மறுபக்கம் நாட்டை அவமானப்படுத்தும் செயலை காற்பந்து சங்கம் அரங்கேற்றியுள்ளதை என்னவென்று சொல்வது!

























