ஈமச் சடங்கு நிலையங்களில் இந்தியர்களுக்கு இடம் மறுக்கப்படுகிறது 

இராகவன் கருப்பையா – இந்நாட்டில் நிறைய இடங்களில் வாடகை வீடுகளோ, ‘ஹோம்ஸ்தே'(Homestay) எனப்படும் குறுகியகாலம் தங்குவதற்கான இல்லங்களோ நம் சமூகத்தினருக்கு மறுக்கப்படுகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு உண்மை.

ஆனால் தற்போது பல இடங்களில் ‘ஃபீனரல் பாலர்'(Funeral Parlour) எனப்படும் ஈமச் சடங்கு நிலையங்களில் கூட நமக்கு இடமில்லை என்பது மிகவும் வேதனையும் அவமானமும் நிறைந்த ஒரு விஷயமாகும்.

அடிப்படையில் இதற்கெல்லாம் யார் காரணம்? அரசாங்கமா? அரசியல்வாதிகளா? பிற இனத்தவரா? இன பாகுபாடா? ஒருபோதும் இல்லை.

இந்நாட்டில் மற்ற இனத்தவரோடு ஒப்பிடுகையில் நம் சமூகம் தாழ்ந்த நிலையில் இருப்பதற்கு பல வேளைகளில் அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையும் குறை கூறிக் கொண்டிருக்கிறோம்.

அந்த ஆதங்கத்தில் நியாயம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. எனினும்  நமது நிலையை உயர்த்திக் கொள்வதற்கு எவ்வாறான முன்னெடுப்புகளை நாம் மேற்கொள்கிறோம் எனும் கேள்வியையும் நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

நாடளாவிய நிலையில் பல இடங்களில் நம் சமூகத்தினருக்கு வாடகை வீடுகள் கிடைப்பதில்லை. வாடகை வீடுகளை இந்தியர்கள் தூய்மையாக வைத்திருப்பதில்லை, அதிக சேதங்களையும் ஏற்படுத்துகின்றனர் என்பதே உரிமையாளர்களின் குற்றச்சாட்டாகும்.

அதே போல ‘ஹோம்ஸ்தே’ இல்லங்களில் ‘ஒரு நாள் கூத்துக்கு மீசையை வச்சான் மேடையிலே,’ எனும் சொற்றொடருக்கு ஏற்ப, ‘மதுபானங்களுக்கும் கூத்து கும்மாளங்களுக்கும் முதலிடம் கொடுத்து இடத்தை நாசமாக்குகின்றனர்,’ என்பது நம் சமூகத்தின் மீது குத்தப்பட்டுள்ள மற்றொரு முத்திரையாகும்.

சில மாதங்களுக்கு முன் லங்காவி தீவில் நீச்சல் குளத்தில் பீர் ரக மதுபான டின்களை மிதக்கவிட்டு அவ்விடத்தை நாசப்படுத்திய அடாவடிக் கும்பலின் அட்டூழியம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டதை நாம் இன்னும் மறக்கவில்லை.

இந்நிலையில் ஈமச் சடங்கு நிலையங்களில் நம் இளைஞர்கள் விடிய விடிய மது அருந்திவிட்டு, கூச்சலிட்டு, அமைதிக்கு பங்கம் விளைவிப்பது மட்டுமின்றி சில வேளைகளில் சண்டை சச்சரவும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

அதோடு இல்லாமல் அந்த இடங்களில் பட்டாசுகளைக் கொளுத்தி நிலைமையை அவர்கள் மேலும் மோசமாக்குகின்றனர் என அந்நிலையங்களின் உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நம் சமூகத்தைச் சார்ந்த எல்லாருமே இப்படி அடாவடித்தனமாக நடந்து கொள்வதில்லைதான். எனினும் ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்,’ எனும் நிலைப்பாட்டை அந்த நிலையங்களின் உரிமையாளர்கள் கொண்டுள்ளதைப் போல் தெரிகிறது.

சிலாங்கூர், கோம்பாக் வட்டாரத்தில் அண்மையில் மரணமடைந்த ஒரு குடும்பத்தலைவரின் உடலை கிடத்தி வைப்பதற்கு அவருடைய பிள்ளைகள் பல்வேறு ஈமச் சடங்கு நிலையங்களை நாடியுள்ளனர்.

நாள் முழுக்கத் தேடிய பிறகு கடைசியில் காஜாங் பகுதியில் உள்ள ஒரு நிலையம்தான் அவர்களுக்கு இடமளித்திருக்கிறது. குறைந்தது 4 இடங்களில் அவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சிலரின் பொறுப்பற்ற செயல்களினால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுவது வேதனையான ஒன்றுதான்.

அளவுக்கு மீறி மது அருந்திவிட்டு அட்டூழியம் புரிவது ஒரு புறமிருக்க, ஈமச் சடங்குகளின் போது பட்டாசுக் கலாச்சாரமும் நம் சமூகத்திற்கு மிகக் கேவலமான ஒரு இழுக்கைக் கொண்டு வந்துள்ளது.

தீபாவளி போன்ற மகிழ்ச்சியானக் கொண்டாட்டங்களின் போது வெடிக்கப்படும் பட்டாசுகள், இறப்பு போன்ற மிகவும் சோகமான நிகழ்வுகளிலும் கொளுத்தப்படும் அவலம் அனேகமாக நம் சமூகத்தில் மட்டுமே காணப்படுகிறது.