ம.இ.கா – வின் வெளியேற்றம் இந்தியர்களுக்கு ஓர்  இழப்பாகும்

இராகவன் கருப்பையா – பிரதமர் அன்வார் அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில் ம.இ.கா.வுக்கு இடமளிக்கப்படாதது அக்கட்சியினருக்கு, குறிப்பாக அதன் தலைவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

மடானி அரசாங்கத்தில் முதல் முறையாத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பேர்கள்(ஒரு சீக்கியர் உள்பட) தற்பொழுது முழு அமைச்சர்களாக உள்ளனர்.

பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்த ரமணனும் ஜ.செ.க.வின் கோபிந்த சிங்கும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில் ம.இ.கா. மீண்டும் ஓரங்கட்டப்பட்டுள்ளது அக்கட்சியினருக்கு சினத்தை ஏற்படுத்தியிருக்கும்.

கடந்த சுமார் ஒரு ஆண்டு காலமாக, “எங்களுக்கு அரசாங்கத்தில் பதவி இல்லை, நாங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறோம்,” என்பதே அவர்களுடைய தலையாயக் குறைபாடாகும்.

இதனால் தேசிய முன்னணியில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் கட்சியின் பொதுப் பேரவையில் முடிவெடுப்போம் என அதிரடியாகக் கூட அதன் தலைவர்கள் அறிவித்தனர்.

கடந்த மாதம் நடைபெற்ற அந்த பொதுப் பேரவையில், எதிர்பார்த்தபடியே, தேசிய முன்னணியில் இருந்து விலகி எதிர்கட்சிகளின் கூட்டணியான பெரிக்காத்தானில் இணைவதத்தான தீர்மானத்தை பேராளர்கள் நிறைவேற்றினார்கள்.

எனினும் அம்முடிவு உடனடியாக நிறைவேற்றப்படவில்லை. ஏனெனில் அந்தக் காலக்கட்டத்தில்தான் அமைச்சரவை மாற்றம் தொடர்பான தகவல்கள் அரசல் புரசலாக வெளிவரத் தொடங்கின.

அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் போது ‘ஏதாவது கிடைக்கக் கூடும்,’ என்று அக்கட்சி எதிர்பார்த்திருந்தாலும் அதில் தவறில்லை. ஏனென்றால் பாரிசானை விட்டு வெளியேறுவது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என ம.இ.கா.வுக்கு அன்வார் அறிவுறுத்தினார்.

அன்வாரின் இந்த ஆலோசனை அக்கட்சிக்கு கொஞ்சம் நம்பிக்கையூட்டியது என்றுதான் சொல்ல வேண்டும். “உங்களுக்கு ஏதாவது தறுகிறேன்,” என்று நேரடியாகச் சொல்லாவிட்டாலும், கட்சித் தலைவர்களுக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்திருக்கும்.

அதனாலோ என்னவோ, அடுத்த மாதம் கூடவிருக்கும் மத்திய செயற்குழ முடிவெடுக்கும் வரையில் ம.இ.கா. தேசிய முன்னணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் என அதன் துணைத் தலைவர் சரவணன் சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.

“வேண்டுமென்றால் கிளம்புங்கள்,” என தேசிய முன்னணித் தலைவரான துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் பட்டும் படாமலும் பல தருணங்களில் வெளிப்படையாகவே பேசிய போதிலும், அமைச்சரவை மாற்றத்திற்காக அக்கட்சி காத்திருந்ததாக நம்பப்படுகிறது.

தற்பொழுது அந்த எதிர்பார்ப்பு வெறும் ‘புஸ் வானமாக’ முடிந்துள்ள நிலையில் பாரிசானிலிருந்து வெளியேறுவதற்கு ம.இ.கா. தீர்க்கமான ஒரு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இனிமேலும் ‘ஆமாம், இல்லை, ஆமாம், இல்லை,’ எனும் நிலைப்பாடு இருக்க வாய்ப்பில்லை.

நாட்டில் நடைபெறும் தமிழ் சார்ந்த கலை, கலாச்சார, சமய, இலக்கிய, அரசியல், சமூக மற்றும் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தமிழில் உரையாற்ற ஒரு அமைச்சர் கூட இல்லை என்பது நம் சமூகத்திற்கு நீண்ட நாள்களாக ஒரு பெரிய குறைபாடாக இருந்து வருகிறது.

ரமணனின் நியமனம் அதனை நிவர்த்தி செய்துவிட்டதாக நாம் எண்ணிவிட முடியாது. அவருக்கு தமிழர் என்ற ஆளுமை இல்லை.  இப்படிப்பட்டச் சூழலில் தமிழில் சிறந்த ஆளுமையைக் கொண்ட, ம.இ.கா.வைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கலாம் என்று அக்கட்சியினர் எதிர்பார்ப்பதிலும் நியாயம் உண்டு.