இராகவன் கருப்பையா- நாடளாவிய நிலையில் உள்ள நமது பள்ளிக்கூடங்களில் அண்மைய மாதங்களாக நிகழ்ந்துவரும் விரும்பத் தகாத சம்பவங்கள் நமக்கு மிகவும் வருத்தமளிக்கக் கூடிய வகையில் உள்ளது.
பதினாறு வயது மாணவி சக மாணவரால் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு கொடூரமாகக் குத்திக் கொல்லப்பட்ட சோகம் மற்றும் பள்ளி அரைகளில் காமக் களியாட்டங்கள் போன்ற சம்பவங்கள் அண்மைய வாரங்களாக நாட்டை உலுக்கியுள்ளன.
கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக நாம் கேள்விபட்டதில்லை. ஆங்காங்கே ஒரு சில பள்ளிக் கூடங்களில் அவ்வப்போது பகடிவதை தொடர்பான செய்திகள்தான் வெளிவரும்.
பிள்ளைகள் மீது அக்கறையற்ற பெற்றோர்களும் ஏனோ தானோ எனும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஆசிரியர்களும் இத்தகைய அவலங்களுக்கு சரிசமமாக பொறுப்பேற்க வேண்டும்.
வீட்டிலுள்ள கணினிகளிலோ கை தொலைப்பேசிகளிலோ தங்களுடைய பிள்ளைகள் எவ்வகையான விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.
சில தினங்களுக்கு முன் ஜொகூர், பத்து பஹாட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் 9 வயதுடைய ஒரு சிறுவன் தனது 6 வயது தம்பியை கழுத்தை அறுத்து காயப்படுத்தியுள்ளான்.
இணையத்தள விளையாட்டுகள்தான் இதற்கு மூலக்காரணம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அவர்களுடைய பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், அச்சிறுவர்கள் இருவரும் தற்பொழுது சமூக நல இலாகாவின் பராமரிப்பில் உள்ளனர்.
அண்மையில் பேரங்காடி ஒன்றின் முகப்பில் இடப்பட்டிருந்த தீபத் திருநாளுக்கானக் கோலங்களை சில சிறுவர்கள் கலைத்து அலங்கோலப் படுத்தினார்கள்.
அருகில் நின்றிருந்த அவர்களுடையப் பெற்றோர்கள் அச்சிறுவர்களின் அடாவடிச் செயலைக் கண்டு ரசித்தார்களே ஒழிய அவர்களைக் கண்டிக்கவில்லை.
இதன் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு, அதன் உள்ளடக்கம் வெகுசன மக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.
இது போன்ற, கண்டிக்கப்படாத சிறு சிறு தவறுகள்தான் நாளடைவில் அவர்களை மிகப்பெரியக் குற்றங்களுக்கு இட்டுச் செல்கின்றன என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
எனவே பிள்ளைகளை முறையாக வளர்ப்பது பெற்றோர்களின் பங்கு என்பது ஒரு புறமிருக்க, பள்ளிகளில் அவர்களை கண்காணிப்பது தங்களுடையக் கடமை எனும் நிதர்சனத்தை ஆசிரியர்கள் மறந்துவிடக்கூடாது.
பாடங்களும் பரீட்சைகளும் மட்டுமே அவர்களுடைய வேலை என்றில்லை. அதற்கு மேற்கொண்டு மாணவர்களின் குணநலன்கள் மீதும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
கெடா, பாலிங்ஙில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஓகஸ்ட் மாதம் வரையில் 3 மாணவ மாணவியரும் ஒரு முன்னாள் மாணவரும் குழு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
பள்ளி அறைகள் உள்பட அந்த பாடசாலையின் வளாகத்தில் வெவ்வேறு இடங்களில் மிகத் துணிச்சலாக அவர்கள் இந்தக் காமக் களியாட்டங்களை அரங்கேற்றி காணொளியில் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து 4 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த ஒழுங்கீன நடவடிக்கைகள் பற்றி பள்ளி நிர்வாகத்திற்கோ ஆசிரியர்களுக்கோ எப்படி தெரியாமல் போய்விட்டது என்பது ஒரு பெரிய கேள்விக் குறிதான்.
ஆக வீட்டில் பெற்றோரின் கடமையும் பள்ளியில் ஆசிரியர்களின் பங்கும் ஒருசேர இணைந்தால்தான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியுமே தவிர அவ்விருத் தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொள்ள முற்படுவதில் அர்த்தமில்லை, எவ்விதப் பயனும் விளையப் போவதும் இல்லை.

























