இராகவன் கருப்பையா – நம் நாட்டின் பழம்பெரும் எழுத்தாளர்களில் ஒருவரான சிம்பாங் ரெங்காம் ஆ.வீர.இராமன், சிறுகதை தொகுப்பு நூல் ஒன்றை வெளியீடு செய்யவிருக்கிறார்.
இந்நிகழ்ச்சி எதிர்வரும் ஜனவரி 24ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஜொகூர், சிம்பாங் ரெங்காமில் உள்ள துன் டாக்டர் இஸ்மாயில் தோட்ட தேசிய வகை தமிழ் பள்ளி மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
மொத்தம் 12 சிறுகதைகளைக் கொண்ட இந்நூல், அவருடைய 4ஆவது படைப்பாகும். ஏற்கெனவே ‘அக்கினி குஞ்சுகள்,’ ‘ஊசி குத்தத்தான் செய்யும்,’ மற்றும் ‘என்னை கடத்திய நொடிகள்,’ ஆகிய 3 நூல்களை அவர் வெளியீடு செய்துள்ளார்.
சிறு வயதிலிருந்தே ஒரு தமிழ் பற்றாளராக தம்மை வளப்படுத்திக் கொண்ட 80 வயதுடைய விர.இராமன், நாடறிந்த புகழ்பெற்றக் கவிஞருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் பருவத்தில், போக்குவரத்து வசதிகள் இல்லாத ஒரு காலக்கட்டத்தில், தாம் வசித்த தோட்டத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள நகருக்கு மணிக் கணக்கில் நடந்தே சென்று தமிழ் மொழி சஞ்சிகைகளையும், புத்தகங்களையும், தினசரிகளையும் வாங்கி வந்து வாசித்து தமது தமிழ் புலமைக்கு அவர் செறிவூட்டிக் கொண்டார்.
ஒரு சிறந்த இலக்கியவாதிக்கான ஆளுமையையும் எழுத்துத்துறை வன்மையையும் சுயமாகவே வளர்த்துக் கொண்ட வீர.இராமனின் படைப்புகள் நாட்டின் எல்லா தமிழ் தினசரிகள் மட்டுமின்றி தென்றல், வானம்பாடி போன்ற வார, மாத இதழ்களிலும் பிரசுரமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில், இதர பிரமுகர்களோடு, பிரபல வழக்கறிஞர் கி.சீலதாஸ், தொழிலதிபர் புத்ரி பரமசிவம் மற்றும் தென்றல், வானம்பாடி ஆசிரியர் வித்யாசாகர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

























