இராகவன் கருப்பையா – அண்மைய காலம் வரையில், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஜேப்படித் திருடர்களின் (Pickpocket) கைவரிசை அதிகமாகவே இருந்தது.
பேருந்து முனையம், தொடர்வண்டி நிலையம், அங்காடி, சந்தை மற்றும் கோயில் திருவிழாக்கள் போன்ற, கூட்டம் நெரிலசாக இருக்கும் எல்லா இடங்களிலும் ஜேப்படித் திருடர்கள் முழு நேரமாக செயல்பட்டு வந்தனர்.
தங்கள் தொழிலில் கைத்தேர்ந்தவர்களான அவர்கள், கடுகளவும் நாம் உணராதபடி நம்மை உரசி, நமது கால்சட்டையில் அல்லது பெண்களின் கைப்பையில் உள்ள பணப் பையை உருவி மின்னல் வேகத்தில் மறைந்துவிடுவார்கள்.
ஆனால், அத்தகையத் திருட்டுத்தனம் அவர்களுக்கு பயனற்றத் தொழிலாக மாறி, தற்பொழுது துரிதமாக மறைந்து வரும் ஒரு குற்றச் செயலாகிவிட்டது.
ஏனெனில் இப்போதெல்லாம் அப்பாவி மக்களிடமிருந்து எத்தனை பணப்பைகளை உருவினாலும் அவர்களுக்குத் தேவையானப் பணம் அதில் இருப்பதில்லை.
மாறாக, கிட்டத்தட்ட எல்லாருடைய பணப்பைகளிலும் ‘க்ரெடிட் கார்ட்'(Credit Card) அல்லது ‘டெபிட் கார்ட்,'(Debit Card) போன்ற கடன் அட்டைகள் அல்லது பற்று அட்டைகள்தான் இருக்கின்றன.
இவற்றையும் கடந்து தற்போது கைத் தொலைபேசியின் வழி ‘கியூ.ஆர்.கோட்,'(QR CODE) எனப்படும் ‘விரைவுத் தகவல் குறியீடு,’ செயல்முறை அதிகமான அளவில் பயன்பாட்டில் உள்ளது.
எனவே நமது கடன் பற்று அட்டைகளையோ கைத் தொலைபேசிகளையோ அந்த ஜேப்படித் திருடர்கள் உருவிச் சென்றால் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடையாது.
நமது பற்று அட்டைகளையோ கைத் தொலைபேசிகளையோ பயன்படுத்துவதற்கு ‘பின் நம்பர்'(Pin Number) எனப்படும் ‘தனிப்பட்ட அடையாள எண்,’ தேவைப்படும். அந்த எண் தெரியாமல் அவர்கள் ஒன்றுமே செய்ய இயலாது.
பற்று அட்டைகளை விட ‘விரைவுத் தகவல் குறியீட்டு’ முறை அதிகம் பாதுகாப்பானது. ஏனெனில் ஒரு சில பற்று அட்டைகளை ‘தனிப்பட்ட அடையாள எண்’ இல்லாமல் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கைத் தொலைபேசியின் பயன்பாட்டுக்கு அந்த எண் அவசியம் தேவைப்படும்.
அதனாலோ என்னவோ எவ்விதமான பொருளாதார பரிவர்த்தனையாக இருந்தாலும் தற்போது ‘விரைவுத் தகவல் குறியீட்டு’ முறைதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பேரங்காடிகள் முதல் தெருவோரம் உள்ள அங்காடிக் கடைகள் வரையில் இந்தச் சேவையை பயன்படுத்துகின்றன. ஒரு ரிங்கிட்டாக இருந்தாலும் ஆயிரம் ரிங்கிட்டாக இருந்தாலும் சகல பரிவர்த்தனைகளுக்கும் இச்சேவை சர்வ சாதரணமாக பயன்படுத்தப்படுகிறது.
மோட்டார் சைக்கில்களில் வலம் வரும் பனிக்கூல் மற்றும் வடை வியாபாரிகள் மட்டுமின்றி சாலை சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் பழ வியாபாரம் செய்பவர்கள் கூட இந்த வசதியைக் கொண்டுள்ளனர்.
துரிதமான தொழில்நுட்ப வளர்ச்சியினால் உலகலாவிய நிலையில் பல்வேறுத் துறைகளில் ஆள்குறைப்பு செய்யப்படுவதைத் தொடர்ந்து இலட்சக் கணக்கானோர் வேலையிழந்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஜேப்படித் திருடர்களும் வேலையிழந்துவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். நேர்மறையானக் கோணத்தில் பார்க்கப் போனால் இந்த வேலையிழப்பு நல்ல விஷயம்தான். ஆனால் அவர்கள் மற்றக் குற்றச் செயல்களுக்குத் தாவிவிடாமல் இருப்பது அவசியமாகும்.
இவையெல்லாமே வரவேற்கத்தக்க தொழில்நுட்ப வளர்ச்சி, தவிர்க்கப்பட முடியாத, காலத்தின் கட்டாயம்.

























