இராகவன் கருப்பையா – இந்த புத்தாண்டிலிருந்து பள்ளிப் பிள்ளைகள் ‘நெக் டை’ எனப்படும் ‘கழுத்துக் கச்சு’ அணிய வேண்டிய அவசியம் இல்லை என கல்வியமைச்சு செய்துள்ள அறிவிப்பு நமக்கு ஆச்சரியமாக உள்ளது.
ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சு முன்வைக்கும் காரணங்கள் நமக்கு அதை விட வியப்பாகவும் கேலியாகவும் உள்ளன.
நம் நாட்டின் சீதோஷ்ண நிலை அதிக உஷ்ணமாக இருப்பதால் நமது மாணவர்களுக்கு இந்த ‘டை’ ஏற்புடையதாக இல்லை என அமைச்சு கூறுகிறது.
மலேசியா உஷ்ணமான ஒரு நாடு என இப்போதுதான் கண்டுபிடித்தார்களா? இவ்வளவு நாள்களாக நம் நாட்டில் சுவிட்ஸர்லாந்தைப் போல பனிப்பொழிவா இருந்தது?
‘டை’ வாங்குவதற்கு எல்லாருக்கும் வசதி இல்லை என்பது இன்னொரு காரணம். எத்தனை மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் இப்படிப்பட்ட ஒரு புகாரை செய்திருப்பார்கள் என்று தெரியாது.
ஏறத்தாழ பத்து ரிங்கிட் விலையுடைய இந்த ‘டை’ அனேகமாக ஆண்டுக்கு ஒரு தடவைதான் வாங்க வேண்டியிருக்கும். வேண்டுமென்றால் உண்மையிலேயே தேவை ஏற்படும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகமோ பெற்றோர் ஆசிரியர் சங்கமோ அதனை வாங்கிக் கொடுக்கலாமே!
அனுபவப்பூர்வமாக பார்க்கப் போனால் அதிரடியான இந்தத் திடீர் முடிவு நம் மாணவர்களுக்கு ஒரு பின்னடைவுதான் என்றே சொல்ல வேண்டும்.
மாணவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் இந்த ‘நெக் டை’யை அணிந்த மாத்திரத்தில் உள்ளூர அவர்களுக்கு கம்பீரமான ஒரு உணர்வு ஏற்படும் என்பதை சம்பந்தப்பட்ட எல்லாருமே அறிவார்கள்.
குறிப்பாக மாணவர்கள், தங்களுடைய பள்ளியின் சின்னம் பொறிக்கப்பட்ட அந்த ‘டை’யை அணியும் போது தனித்துவமான ஒரு உணர்வால் உந்தப்பட்டு பாடசாலை மீதான தங்களுடைய மரியாதையும் விசுவாசமும் பன்மடங்கு அதிகரிப்பதையும் உணர்கின்றனர்.
இந்த ‘டை,’ உலகம் முழுவதும் காலங்காலமாக கண்ணியம், நேர்த்தி போன்ற அம்சங்களோடு மரியாதையின் சின்னமாகவும் இருந்து வருகிறது.
‘டை’ அணிவது மேற்கத்திய கலாச்சாரம், நமக்கு அது ஒத்து வராது என நமது கல்வி அமைச்சு மறைமுகமாக சுட்டிக் காட்ட எண்ணுகிறதோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
‘டை’ அணியும் வழக்கம் 16ஆம் நூற்றாண்டில் குரோஷியா நாட்டில் தொடங்கியது. பிரஞ்சுப் போரின் போது போர்க்களத்திற்குச் செல்லும் வீரர்களின் மனைவிகள் தங்களுடையக் கணவர்களின் கழுத்தில் மெல்லியத் துணியொன்றை அணிவித்து வாழ்த்தி அனுப்பினார்கள்.
அதுவே நாளடைவில் அனைத்துலக ரீதியில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கும் அலுவலகங்களுக்கும் பெரியவர்களும், பள்ளிகளுக்கு மாணவர்களும் அணியும் ஒரு பிரதான அணிகலனாகிவிட்டது.
எது எப்படியோ அதிக அளவில் சமயம் ஊடுருவியுள்ள நமது பாடத் திட்டங்களும் பள்ளிக்கூடங்களும் அத்ததைய ஊடுருவல்களால் மேலும் பாதிக்கப்படாமல் இருப்பது அவசியமாகும்.
இதுநாள் வரையில் ‘நெக் டை’யுடன் மிடுக்காகப் பள்ளிச் சென்ற நமது மாணவர்கள் புத்தாண்டில் அத்தகைய கம்பீரத்தை இழக்கப் போவதை நினைத்தால் நமக்கு வருத்தமாகத்தான் உள்ளது.

























